December 20, 2008

அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்தல்

செல்மா பிரியதர்ஷன்

சம்பவம்: 1


நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் லீனா மணிமேகலையிடமிருந்து தொலைபேசி அழைப்பு. தமிழ் நாட்டிலுள்ள கவிஞர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கக் கோரி ஒரு கண்டன கவிதைப் போராட்டத்தை நடத்தலாம். ஓப்பாரி போராட்டம் என அதற்குப் பெயரிடலாமா?

தொடர் நிகழ்வு:

கவிஞர்கள் சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியம், நரன் உடனிணைந்து தமிழில் எழுதிவரும் நவீன கவிஞர்களின் தொலைபேசி எண்களை சேகரித்தார்கள். மாவட்டந்தோறும் பல்வேறு அரசியல் நிலைப்பாடுள்ளவர்கள், குழுக்கள், தனியர்கள் என சாத்தியப்பட்டவரை அனைவரிடமும் தொலைபேசி கருத்து கோரப்பட்டது.

ஏதாவது செய்தாக வேண்டும். ஒப்பாரிப் போராட்டம் என்பது சரிதான். கவிஞர்கள் வேறு என்ன செய்வது? ஒப்பாரி என்றால் செத்த பிணங்களுக்கு முன் அழுவது மட்டுமில்லையே. ஒப்பாரி என்பது ஒரு கதை சொல்லும் முறை. வரலாறைச் சொல்லலாம். இறந்த பிணங்களைக் காட்டி காரணமானவர்களை குற்றம் சுமத்தலாம். கோரிக்கையிடலாம், அழலாம், ஆர்ப்பரிக்கலாம், கோபப்படலாம், சாபமிடலாம், தூற்றலாம்.

இல்லை. இதில் உடன்பாடில்லை. இது போராட்ட வடிவமில்லை. என்ன ஒப்பாரி? கவிஞர் என்பவர் மூக்கு வழிய அழுது கண்ணீர் சிந்துபவரா? இது அவ்வளவு அரசியல்பூர்வமாக இல்லை. துல்லியமாக வெகு காத்திரமான போராட்டமாக இருக்க வேண்டும்.

சரி. கண்டன கவிதைப் போராட்டம் என்று அறிவிப்போம். அதற்குள் ஒப்பாரி பாடுபவர்கள் பாடிக்கொள்ளட்டும். பரணி, எதிர்பரணி பாடுபவர்கள் பாடட்டும்.
எழுத்தாளர்கள், கலைஞர்களையும் உள்ளடக்கி விரிவடைந்த போராட்டமாக அறிவிக்கலாமே?

தமிழகத்தில் எண்ணிக்கையில் கவிஞர்கள் அதிகம். மேலும் அவர்களுக்கான பொது மேடை அதிகமாக இல்லை. அனைத்துக் கவிஞர்களின் குரல்களும் ஒலிக்கப்படவேண்டும். உரைகளை தவிர்த்துவிட்டு கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். எழுத்தாளர்கள் கலைஞர்கள் அனைவரது ஆதரவையும் கோருவோம். பத்திரிக்கைகளுக்கு தகவல் அளிப்போம்.

டிசம்பர் 6 வரை

கவிதைப் போராட்டம் குறித்து கவிஞர்கள் பேசிக்கொண்டார்கள். அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளும் பலருடனும் பேசிய வண்ணம் இருந்தனர்.

அவரை இன்னும அழைக்கவில்லை
என்னை இன்னும் அழைக்கவில்லை
இல்லை. இது தனியொருவர் நடத்தும் நிகழ்ச்சியோ, குடும்பவிழாவோ இல்லை, சேகரித்த, தொடர்பு கொள்ள முடிந்த அனைத்து எண்களையும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் பெற்றவர்கள் அவர்களோடு தொடர்பிலுள்ளவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. செய்தி எட்டியவர்கள் தொடர்பில் உள்ளவர்களோடு களத்திற்கு வரட்டும்.

போராட்ட அறிவிப்பு

இது யார் நடத்தும் போராட்டம்
கவிஞர்கள் இணைந்து நடத்தும் போராட்டம்
நாம் நடத்தும் போராட்டம்

தலைநகரில் வசிக்கும் லீனா மணிமேகலை தமிழச்சி, குட்டிரேவதி, தமிழ்நதி, இன்பா சுப்ரமணியம், வெளிரெங்கராஜன், ஐயப்ப மாதவன், ஆனந்த், நரன், கென் ஆகியோர் அடிக்கடி சந்தித்து ஆயத்தப்பணிகளை செய்தனர்.

இந்த டிசம்பர் 6 பயங்கரவாதிகளின் நாச வேலைகளுக்கு சென்னைதான் இலக்கு என்ற செய்தி பரவலாக பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் வெளிமாவட்டத்திலிருந்து ரெயில் மற்றும் பேருந்துகளில் வந்து சேரவேண்டியவர்கள் வந்து சேர்ந்தனர். சென்னையில் வசிப்பவர்களோடு முந்தைய நாளே வந்து சேர்ந்த சுகிர்தராணி, யவனிகா ஸ்ரீராம், செல்மா பிரியதர்ஸன், கம்பீரன், இசை ஆகியோர் இணைந்து அடுத்த நாளைய போராட்ட நிகழ்ச்சியைத் திட்டமிட்டார்கள். கோரிக்கைகளை விவாதித்து இறுதிப்படுத்தினார்கள்.

சம்பவம் : 2

போராட்டம் குறித்து பத்திரிக்கைகளில் விளம்பரம் தரவில்லை. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கவில்லை. தலைமை, சிறப்பு விருந்தினர்கள் என்று தனியொருவர் எவரையும் முன்னிலைப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி டிசம்பர் 07-ல் கண்டன கவிதைப் போராட்டம் நிகழ்ந்தேறியது. தமிழகம் முழுவதும் இருந்து கவிஞர்கள் தங்களது சொந்த செலவில், சொந்த பொறுப்பில், சொந்த தார்மீகத்தில் வந்து கலந்து கொண்டார்கள். எழுத்தாளர்கள் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டியது. இன்குலாப். பாமா போன்ற மூத்த தலைமுறையினரிலிருந்து நிஷாந்தினி, லஷ்மிசரவணக்குமார் போன்ற இளையதலைமுறையினர் வரை தங்களது மனக்கொதிப்பை பதிவு செய்தார்கள். கனிமொழி வந்து கவிதை வாசித்துச் சென்றார். சுகிர்தராணி, கோணங்கி, யவனிகாஸ்ரீராம், ரவிசுப்ரமணியம், யாழன்ஆதி, இன்பா, ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். இறுதியாக வளர்மதி எழுதி பிரசாத், தமிழச்சி ஆகியோர்களோடு இணைந்து இயக்கிய வம்சவதம் என்ற கவிதை நாடகம் ஐநூறிற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.

நவீன தமிழ் கவிஞர்களின் தன்னிச்சையான முதல் கவிதை இயக்கம்:

இங்குள்ள இலக்கிய இதழ்கள், முகாம்கள், முகமைகள், அதிகாரத்தோடு தொடர்புடைய இலக்கிய அமைப்புகள் ஆகியவைகளின் வரம்பெல்லைகளுக்கு வெளியே நிகழ்ந்திருக்கும் தன்னிச்சையான இக்கூட்டிணைவானது வரலாற்று முக்கியத்துவம் உடையது. வேறொரு இலக்கிய அமைப்போ, இதழோ, வேறொரு இலக்கிய நிகழ்விற்கு இருநூறு கவிஞர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்றால் பயணம், தங்குதல், உணவு ஆகியவற்றிற்காக மட்டுமே இரண்டு இலட்சம் ரூபாய் செலவு செய்தாக வேண்டியிருக்கும்.

எது எப்படியோ, இலக்கியத்திற்கு வெளியே ஒரு பொதுப்பிரச்சினைக்காக இருநூறு கவிஞர்கள் தங்கள் அத்தனை வேறுபாடுகளுடனும் ஒன்றிணைந்தது மாற்றத்தின் அறிகுறி. இப்போராட்டம் ஒரு இயக்கமாக வடிவெடுத்திருக்கிறது. "நவீன தமிழ்க் கவிஞர்களின் தன்னிச்சையான முதல் கவிதை இயக்கம்" என்று இதனைக் குறிப்பிடலாம். இதனை ஒரு ஆரம்பமாகக் கொள்ளலாம். இனி சமூக அரசியல் கலாச்சார தளங்களில் ஏற்படும் பொதுப்பிரச்சினைகளின் மீது சமூகத்தின் மனசாட்சியாய், மனவிழைவாய், சமரசமற்று தங்களது மூர்க்கமான குரலை ஒலிப்பவர்களாக கவிஞர்கள், தங்களை இயக்கமாக உணர்நது சமூகச் செயல்பாடுகளை நோக்கியும் திரள வேண்டும். இந்த ஒன்றிணைவு பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய காட்சிகள்:

இம்முறை ஆண்டின் மழைக்காலத்தை சிங்கள அரசு தேர்ந்தெடுத்தது. "பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை ஓயமாட்டோம். இது இறுதிப்போர்" என்று ராஜபக்சே அறிவித்தது பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. திருப்பியனுப்பப்பட்ட நார்வே தூதுக்குழு பிரபாகரனோடும், சிங்கள அரசோடும் பல ஆண்டுகளாக அரசியல் ரீதியான பேச்சு வார்த்தை நடத்தியபோது பிரபாகரன் என்பவர் சிங்கள அரசிற்கு யாராக இருந்தார்? ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும பிரபாகரனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒருவேளை இந்திய அரசு கோரியதா?. பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுடன் ஒப்படைப்பதற்கான போர்தான் இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்றதா? இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் கொலைக்கு காரணமான இன்னொருவரை பிடிக்கத்தான் ஈழத்தமிழ்களின் வாழ்விடங்களின் மீது குண்டுகள் வீசப்படுகிறதா?. பல்லாயிரக்ணக்கான குடியிருப்புகள் அழிக்கப்படுகிறதா? ஈழத்தமிழர்கள் வாழ்விடமற்று வனப்பகுதியில் முகாம்கள் அமைத்துப் பிழைப்பதற்கும், தங்க இடமற்று இம்மழைக் காலங்களில் பாம்புகளிடம் கடிபட்டு சாவதற்கும், காட்டு மரக்கிளைகளின் தொட்டில்களில் உறங்கும் குழந்தைகளின் இரத்தத்தை அட்டைகள் உறிஞ்சுவதற்கும், பள்ளிகளில் இருந்து குழந்தைகள் வெளியேற்றப்படுவதற்கும், உறுப்புகள் இழந்த தமிழ் உடல்களைக் கொட்டிப்போடும் இடமாக வகுப்பறைகள் மாறியதற்கும், முகாம்களில் பசிக்கு ஏந்தப்படும் பாத்திரங்களின் மீது மீண்டும் குண்டுகளைப் போடுவதற்கும், இன்னும் இலங்கை நிலத்திலிருந்து தமிழனத்தை கழுவி வாரி ஊற்றுவதற்கும் சொல்லப்படும் ஒரே காரணம் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்பது.

சிங்கள அரசின் கூற்றிற்கு இந்திய அரசின் அதிகாரபூர்வமான பதில் என்ன? சிங்கள இராவணுத்திற்கு பயிற்சிகள் அளிப்பதுவும், தொடர்ந்து பொருளாதார உதவிகள் செய்து வருவதையும் எப்படிப் புரிந்துகொள்வது? இலங்கை அமைச்சர்கள் தமிழக அரசியல்வாதிகளை இழிவாகப் பேசுவதையும், இந்தியாவிலுள்ள இலங்கை தூதரங்களில் விருந்துகள் நடைபெறுகையில் கலந்து கொள்பவர்களையும் அங்கு உருவாகும் சதித் திட்டங்களையும் மத்திய அரசு கண்டும் காணாமல் ஏன் நடந்து கொள்கிறது? மத்திய ஆட்சியில் அதிகாரத்தை பங்கு போட்டிருக்கும் தமிழக கட்சிகளும், தமிழக அரசும், மத்திய அரசிற்கு தங்களால் தரமுடிந்த நெருக்கடி இவ்வளவுதானா?

சம்பவம் 3

சில எதிர் வினைகள்:

ராஜிவ் காந்தி படுகொலைக்குப்பின் தமிழ்நாட்டில் தற்பொழுதுதான் ஈழத்தமிழர்கள் குறித்து அரசியல் ரீதியாக பேசும் நிலை இங்கு உருவாகியிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் உறைந்திருந்த மௌனத்தின் மீது கவிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், அறிவு ஜீவிகள், என்ன வினையாற்றினார்கள்?

இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வை இங்கிருக்கும் தமிழர்களாலோ, கட்சிகளாலோ, படைப்பாளர்களாலோ ஏற்படுத்தி விட முடியுமா?

இங்கு போராட்டம் நடத்துவதாலோ, கூட்டங்கள் போடுவதாலோ, ஒப்பாரி வைப்பதாலோ, ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்து போகுமா?

தமிழகத்தில் எத்தனையோ எரியும் பிரச்சினைகளின்போது அமைதி காத்த படைப்பாளிகள், தலித்துகளின் உடல், வாழ்வு, உடமைகள் மீது அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கும்போது, படைப்பாளிகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவது பாதுகாப்பானது.

மலேசியாவில் தமிழர்கள் ஒடுக்கப்படும்போது குரல் கொடுக்காத படைப்பாளர்கள் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் போது மட்டும் ஏன் குரல் கொடுக்கிறார்கள்?

தமிழக முதல்வர் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு குரலை எழுப்பிய பின்னர் இங்கு நடைபெறும் அத்தனை போராட்டங்களும் அரசாங்கத்திற்கு கீழ் நடைபெறுவதுதான்.

தமிழகத்தில் சில காட்சிகள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி இயக்கங்களை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தொடர்ந்து இயக்கங்கள் நடத்துகிறது.

தமிழகத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களை முதல்வரிடம் ஒப்படைக்கிறார்கள்.

தமிழக திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், கூட்டங்கள் போடுகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கைதாகி வெளியில் வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை அரசிடம் அளிக்கிறார்கள். பெருநிதியையும், பொருட்களையும் திரட்டி தமிழக அரசு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அனுப்புகிறது.

தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், இந்தியப் பிரதமரை சந்தித்து மனு கொடுக்கிறார்கள்.

அரசுக்குக் கீழ் வாழ்வதும், அரசின் மனச்சாட்சியை தொந்தரவு செய்வதும்:

ஒரு கவிஞரோ, படைப்பாளியோ, எல்லாரையும்போல அரசுக்குள்தான் பிறக்கிறார்கள். கற்கிறார்கள், வாழ்கிறார்கள். அரசு அளிக்கும் அடையாள அட்டையை பத்திரமாக வைத்து கொண்டு அரசுப் பண்டக சாலைகளில் பொருட்கள் வாங்கி, தின்று, குடித்து வரிசையில் நின்று வாக்களித்து, காவல்துறைக்கு, நீதிமன்றத்திற்கு, அரசியல் சாசன விதிகளுக்குக் கீழ் பிழைத்திருக்கப் பழகுகிறார்கள். மிகுந்த தன்னுணர்வும், விடுதலை வேட்கையும் உடைய இவர்கள்தான் முதலில் அதிகாரங்களை கண்டறிகிறார்கள். அதிகாரம் எங்கிருந்து உருவாகிறது, எவ்வாறு பரவுகிறது, கட்டுப்படுத்துகிறது. எல்லைகளுக்கும் விதிகளுக்கும் கீழ் மந்தைகளை திரட்டி எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதை அறிகிறார்கள். இவர்கள் அதிகாரத்தோடு எப்படி உறவை பேணுகிறார்கள். சிலர் துணை போகலாம், உடந்தையாயிருக்கலாம். ஒரு எல்லை வரை இணங்கி வாழலாம். இணங்கி வாழ்வது போல் பாசாங்கு செய்யலாம். இணங்கி வாழ்ந்து அரசை மக்களுக்கு காட்டிக் கொடுக்கலாம். உள்ளுக்குள் இருந்தே விலகி நிற்கலாம், முரண்டு பிடிக்கலாம், ஊடறுக்கலாம், எதிர்த்து நிற்கலாம், பலியாகலாம். பிறகு அரசுக்கு வெளியே இருந்து செயல்படுவது என்றால் என்ன என்பதைச் சொல்ல வாக்காளர் அட்டை வைத்திருக்கும் நமக்கு அரசியல் சாசன விதிகளில் இடமில்லை. அது ஒரு பெருங்கனவும் கூட.

டிசம்பர் 07-ல் நடைபெற்ற கவிதைப் போராட்டம் எங்கு நடத்தவேண்டும், எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை நடத்தவேண்டும் என்று நமக்கு அனுமதி அளித்தது காவல்துறை. அரசின் கண்காணிப்பு நிறுவனமான காவல்துறையின் அனுமதிக்குக்கீழ் தேர்ந்தெடுத்துத் தரப்பட்ட இடத்தில், நேரத்தில் அது விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஒரு பந்தலைப் போட்டு அமர்ந்தோம்.

நிபந்தனைகள் இரண்டு

1. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை பற்றியோ அதன் தலைவரையோ ஆதரித்துப் பேசக்கூடாது.

2. இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், ஊறுவிளைவிக்கும்படி குரல் எழுப்பக் கூடாது.

இங்கு கவிஞர்களோ, படைப்பாளிகளோ அதிகாரங்களோடு கொண்டுள்ள உறவில் ஒரே மாதிரித் தன்மையுடையவர்களாக இருக்க முடியாது. முழுவதும் அடங்கிப்போவது முழுவதும் இணங்கிப் போவது என்ற நிலையில் பலரும் இருந்தாலும், இணங்குவது போல் இணங்கி முரண்டுவது, எதிர்க்குரலை வார்த்தைக்குள் மறைத்துப் பதுக்கி வைப்பது, சில நேரங்களில் வெளிப்படையாய் ஒலித்துப் பார்ப்பது என்ற வகையில் ஒரு கலவையான தன்மையுடைதாகத்தான் இருக்கும். அந்தக் கவிதைப் போராட்டத்தின் பந்தலுக்குள் படைப்பாளிகளின் குரலொடுக்கம் நடந்தது. அரசுக்குக் கீழ் அடங்கி ஒலித்தது என்று தட்டையாக்கி கூறுவது பொறுப்பற்ற, பக்குவமற்ற, பொதுப்புத்தி சார்ந்த சமூக இயங்கியலின் மீது எந்தப் புரிதலுமற்ற படைப்பு மனமற்ற குறைபாடுடைய பார்வைதான்.

போராட்டத்திற்கு முன்னரே "எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல்" என்ற பதிவிலிருந்து சில வார்த்தைகளை இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

"தமிழ் மொழியில் கவிதைகளை எழுதிவரும் நாங்கள் நிலவிவரும் சூழல்களையும் நிலவரங்களையும் அறிந்திருக்கிறோம். ஒரு சமூகத்தில் மொழியில் இயங்கும் கவிஞர் என்பவரின் வரம்புகளையும் சாத்தியங்களையும் உணர்ந்தே இருக்கிறோம். அரிய உயிரினத்தின் மாதிரிகள் போல நாம் வாழும் காலத்தில் ஈழத் தமிழினம் கண்களின் முன்னால் அழிந்து வருவதைக் காணச் சகியோம். எங்களிடம் அதிகாரம் இல்லை. ஆயுதங்கள் இல்லை. ஆட்சி இல்லை. வார்ததைகள் மட்டுமே உள்ளது. சிங்கள அரசின் தமிழ் ரத்தம் பருகும் இராணுவ வெறிமீது ஏவுகணைகள் போல் வார்த்தைகளை வீசுவோம். ஈழத்தமிழனத்தின் விடுதலைமீது, வாழ்வுமீது பாராமுகமாய் இருக்கும் தமிழக அரசியல் மௌனத்தின் மீது தற்கொலைபோல் வார்த்தைகளாய் விழுவோம். தேசம் என்று நம்பி வாழும் இந்தியப் பாராளுமன்றத்தின் மனசாட்சியை நோக்கி மரணம் போல வார்த்தைகளை நீட்டுவோம்".

ஒரு அமைப்புக்குள், வரம்புக்குள், நிபந்தனைக்குள் எத்தனை குரல் அடங்கி ஒலித்தது என்று எண்ணிக் கொண்டிருப்பவன் நோய்மையால் பீடிக்கபட்டவன். எத்தனை குரல்கள் அடங்க மறுத்தது, எத்தனை குரல்கள் மீறிப் பிதுங்கியது. அக்குரல்கள் அவ்வொட்டு மொத்தத்தின் மீது என்ன தாக்கம் புரிந்தது. அங்கு சமூகத்தின் மனசாட்சியாய், அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்யும்படி ஒரு குரலேனும் எழாதா என்று ஏங்கியிருப்பதும் அக்குரலை ஒட்டுமொத்தத்தின் பிரதிநிதித்துவமாய் மாற்றுவதும்தான் படைப்பாளியின், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவரின் நேர்மையாக இருக்க முடியும்.
படைப்பாளி பொதுவாக அதிகாரத்திற்கு எதிராக அரசுக்கு முன்னால் விழுந்து சமூகத்தின் மனசாட்சியாகத்தான் தன் குரலை ஒலிக்க வேண்டும். ஈழம் போன்ற பிரச்சினைகளில் அரசு தன் ஆதரவு நிலை எடுக்கும் போது படைப்பாளிகள் உற்சாகமடைந்து களத்தில் இறங்குவது இயல்பானதுதான். ஆனால் தமிழ் மாநிலத்தில் படைப்பாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகளுக்கும் அதிகாரத்திற்கும் உள்ள உறவு விமர்சனப்பூர்வமற்ற வகையில் சில நேரங்களில் அரசின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் போல் இலக்கிய பண்பாட்டுச் செயல்பாடுகள் அமைத்து விடுவது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாகும். இந்தக் கூட்டணியோடு சங்கமிக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் இலக்கிய உதிரிகள் மட்டுமே.

செயல்படுவது, மௌனம் காப்பது ஆகிய படைப்பாளியின் செயல்பாடுகள் அனைத்தும் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ அரசால் மட்டுமே வழிநடத்தப்படும் ஒன்றாக இருப்பது அவமானத்திற்குரியது. அச் சமூகத்திற்கு விடுதலை இல்லை. ஆனால் படைப்பாளியின் ஒட்டுமொத்த மன அமைப்பும் அரசின் சமிக்கைகளை ஒட்டியே இயங்கும் தன்மையுடையதாக அமைந்துவிட வாய்ப்பில்லை. மௌனம் காப்பது என்பது மௌனம் காப்பது மட்டுமல்ல. பொறுத்திருப்பது. வாய்ப்பு வரும் வரை இணங்கி இருப்பதுபோல் பாசாங்கு செய்வது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப்பின் ஈழத் தமிழர்கள் விடுதலை குறித்தோ விடுதலைப் புலிகளைப் பற்றியோ யாருமே பேசாமல் இருந்தார்கள் என்று சொல்லி விட முடியுமா? இன்றுபோல் ஒரு இயக்கமாக இல்லாவிட்டாலும் கூட படைப்பாளிகள், செயல்பாட்டாளர்கள் தங்களுக்குள்ளும் தங்கள் குழுக்களுக்குள்ளும் பேசியும் எழுதியும் தான் வந்திருக்கிறார்கள்.

மேலும் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட பிறகு கிளெஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி இப்போது பெரிய அளவில் இன அழிப்பு வேலைகளை சிங்கள அரசு செய்து வருகிறது. 1983க்குப் பிறகு சிங்கள அரசு வெறித்தனமாக மேற்கொண்டிருக்கும் இப்போருக்கான காரணத்தை இந்திய அரசு மேல் சுமத்தியிருக்கிறது. ஒரு படைப்பாளி என்ற அளவில் இல்லா விட்டாலும் கூட இந்தியாவை காரணம்காட்டி தமிழினத்தை அழிப்பதைக் கண்டிக்க ஒரு இந்திய குடிமகன் என்ற அளவில் போதுமான காரணங்களும் நியாயங்களும் இருக்கிறது.

மௌனம் காப்பது என்பது எவ்வாறு மௌனம் காப்பது மட்டும் இல்லையோ அது போலவே செயல்படுவது என்பது அரசோடு அப்படியே சேர்ந்து செயல்படுவது என்று அர்த்தமாகிவிடாது. தமிழக அரசும் கட்சிகளும் 'ஆதரிப்பு வேலைகளை' ஒரு அடையாளம் என்ற வகையில் மட்டுமே செய்து வருகிறது.

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பதவி விலகல் கடிதம் வாங்கியது, உண்ணாவிரதமிருந்தது, நிதி திரட்டி அனுப்பியது, பிரதமரிடம் போர் நிறுத்தம் வேண்டி மனுக் கொடுத்தது. இவையெல்லாம் ஒரு ஆதரவு நிலை என்ற செய்தியை சமூகத்திற்கு தெரிவிப்பது என்ற வகையில் மட்டுமே அமைந்துள்ளது.

டிசம்பர் 7ல் நடைபெற்ற கண்டனக் கவிதை போராட்டத்தின் கோரிக்கைகள் மூலமாகவும் அங்கு எழுப்பப்பட்ட கவிதைக் குரல்களின் வழியாகவும் நாம் எவ்வாறு அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்ய விரும்பினோம்.

தமிழக அரசு அதிகாரத்தை பங்குபோட்டுள்ள மத்திய அரசிற்கு "போதுமான நெருக்கடியைத்" தரவில்லை என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன? பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் இப்போரில் கொல்லப்படும் ஈழத்தமிழுயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழ் மாநிலம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் என்றெல்லாம் எச்சரிக்கத் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மத்திய அமைச்சர்களிடமும் வாங்கிய பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்து (ஒரு வேளை ஒரு மாநில அரசு மத்திய அரசோடு பகிர்ந்திருக்கிற ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேறுவது என்ற செயல்பாட்டின் குறியீட்டு அர்த்தம் என்பது என்ன?) மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தால் மத்திய அரசின் செயல்பாடு எப்படி அமைந்திருக்கும்? ஒரு வேளை ஈழத்தில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையாவது குறைந்திருக்குமே.

ஒரு புறம் சிங்கள அரசிற்கு பொருளாதார இராணுவ உதவிகளைச் செய்து கொண்டே, வீடிழந்து, உடமைகள் இழந்து எங்காவது தப்பி உயிர் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் (தமிழகத்திற்குள்) அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை விரும்பத்தகாத குடியேற்றங்களாக மத்திய அரசு கருதுகிறது. பிரணாப் முகர்ஜி என்ற மத்திய அமைச்சர் தமிழகத்தில் வரும் போர் கைதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி தனது சொந்த பொறுப்பில் பராமரிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தினார். இதற்குக்கூட எதிர்வினை செய்யமுடியாது தனது இந்திய தேசிய ஒருமைப்பாட்டில் விறைத்து நிற்கிறது தமிழக அரசு.

மேலும் தமிழகத்திலுள்ள அகதி முகாம்கள் வாழும் தகுதியுடையதாக இல்லை. ஈழத்தமிழர்கள் மேல் உண்மையாகவே பற்று இருக்குமானால் இங்குள்ள அகதிகள் வாழ்க்கைக்குரிய உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நீண்டகால அடிப்படையில் தமிழக அரசு திட்டமிடவேண்டும்.

தன் வட எல்லையில் இராணுவத்தை நிறுத்தி "ஒருகைப் பிடி மண்ணை அந்நியன் அள்ளிக்கொண்டு போக விட மாட்டோம்" என்று சபதமிடும் இந்திய அரசிற்கு வடக்கே மட்டும் தான் எல்லையா? இந்திய இலங்கை கடல் எல்லையால் சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லப்படும் மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? இந்திய கடல் எல்லையில் சிங்கள இராணுவத்தின் செயல்பாடுகளுக்கு இந்திய அரசு பொறுப்பேற்று செயல்படவேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களை தமிழக ஊடகங்கள் திட்டமிட்டே தவிர்த்து வருகிறது. தமிழ் மக்களுக்கு செய்திகளை மறைப்பதில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் மக்களிடமிருந்து உருவாகும் நெருக்கடி தவிர்க்கப்படுகிறது. இன்று எல்லா தமிழக அரசியல் கட்சிகளிடமும் ஒலிபரப்பு வசதி இருந்தும் அங்கு மானும் மயிலும் ஆடுகிறது. ஒரு முறை கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்டபோது "ஐய்யோ கொல்றாங்க" என்று ஒரு வார காலம் தமிழ் மக்களின் மனங்களில் எவ்வளவு அதிர்வுகளை உருவாக்கியது. கிளிநொச்சியில் 52000-ற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துபோயுள்ளன. மழைவெள்ளத்தில் 15000 வீடுகள் அழிந்து போயுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் காடுகளில் வாழ்கிறார்கள். சர்வதேச நாடுகளால் தடைசெய்யப்பட்ட கிளெஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. " ஐய்யய்யோ தமிழினத்தையே அழிக்கிறாங்க அழிக்கிறாங்கன்னு" நமது ஊடகங்களில் எதுவுமே ஒலிபரப்பப்படுவதில்லையே அது ஏன்?.

இந்தியாவில் இந்துக்களைக் காப்போம் இராம இராஜ்யத்தை உருவாக்குவோம் என்று அரசியல் செய்து வரும் இந்துத்வா சக்திகளுக்கு இலங்கையில் கொல்லப்படுபவர்கள் இந்துக்கள் என்று இன்றுவரை தெரியாமல் போனதா? புத்த பிச்சுகளும் இராணுவ சேவையில் ஈடுபடும் அளவிற்கு பௌத்த மத வெறியும் இதில் கலந்திருக்கிறது என்று இவர்களுக்கு தெரியாதா? இதுவரை மதவெறியால் கொல்லப்படும் இந்துக்களுக்கு மத அடிப்படையிலாவது ஆதரவாக ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை.

இவ்வாறாக இயன்றவரை இந்தியாவிலுள்ள அனைத்து அதிகாரங்களை நோக்கியும் குற்றம் சுமத்தி விமர்சித்து இந்தப் போராட்டத்தில் கடுமையாக குரல் எழுப்பியிருக்கிறோம்.

ஈழத்தமிழர் பிரச்சனைக்கான இறுதித் தீர்வு என்னவாக இருக்கப் போகிறது என்று நம்மால் அனுமானிக்க இயலவில்லை. நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளைத் தடுக்க, தலையிட வேண்டி நம் சார்ந்த அரசாங்கங்களிடம் போராட வேண்டியிருக்கிறது.

கிளெஸ்டர் குண்டுகள்போல் சர்வதேச நாடுகள் பலவற்றால் தடைசெய்யப்பட்ட அழிவுப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருக்க, ஈழத்திலிருந்து வாழ விரும்பும் அப்பாவி தமிழ்மக்களைக் கொல்லாதிருக்க, அவர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான வாழ்வாதாரங்கள், வேலை வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ள, தமிழர்களின் உயிர்வாழ்ந்துகொள்ளும் உரிமையின் மீது மீறல்கள் ஏற்படாதிருக்க, நாம் ஒரு சர்வதேச பார்வையாளர்கள் குழு ஒன்றை நிரந்தரமாக கோருகிறோம். அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருத்தல் நலம். ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பால் இக்குழு ஏற்படுத்தப்பட்டு இலங்கை நிலவரங்கள் குறித்து அவை அளிக்கும் அறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவற்றை இலங்கை அரசு ஏற்று நடக்கும்படியான ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். தமிழக அரசும் இந்திய அரசும் இதை நோக்கிய சர்வதேச கவனத்தை கோரவேண்டும்.

டிசம்பர் 7 - இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான கண்டனக் கவிதைப் போராட்டம் இன்னொரு வகையிலும் சிறப்புக்குரியதே. பெண்களால் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுகிருக்கிறது. "நவீன தமிழ் கவிஞர்களின் சுவாதீனமான முதல் கவிதை இயக்கம்" என்று இதைக் குறிப்பிடுவதை பலரும் விரும்பாமல் கூட இருக்கலாம். அப்படிச் சொல்லிப் பார்ப்பது தனிப்பட்ட விருப்பமாக மட்டுமே எஞ்சி நிற்கலாம்.

ஆனால் இந்நிகழ்வுக்கு நூற்றிற்கும் மேற்பட்ட கவிஞர்கள் தன்னிச்சையாக திரண்டு கூடியது நல்ல அறிகுறி. இந்த ஒன்றிணைவை பாதுகாத்து இந்தப் போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து செயல்படுவது, பிற சமூக கலாச்சார நடவடிக்கைகளிலும் இயக்கமாய் இடையீட்டை செய்வது அரசு அதிகார மையங்களை அண்டியே வாழாமல் விமர்சனங்களை முன் வைப்பது, அதிகாரங்களுக்கு எதிராக இயக்கமாகி குரல் கொடுப்பது போன்ற முயற்சிகளுக்கு இந்த கண்டனக் கவிதைப் போராட்டம் ஒரு நல்ல ஆரம்பம்.

December 10, 2008

கண்டனக் கவிதைப் போராட்டம்-ஓர் பதிவு (தமிழ் நதி )

கடலலைகளின் பின்னணியில்
கவிஞர்களின் கண்டனக் கவிதைப் போராட்டம்

பல்லாண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழர்கள்பால் தமிழகத்தின் கவனமும்
அனுதாபமும் குவிந்திருப்பதன் நீட்சிகளில் ஒன்றாக, கடந்த ஏழாம் திகதி
ஞாயிற்றுக்கிழமை மெரீனா கடற்கரையில் நடந்தேறிய கண்டனக் கவிதைப்
போராட்டத்தைக் கூறலாம். இந்நிகழ்வானது, ஈழத்தில் இடம்பெயர்ந்து அகதிகளாக
அலைக்கழியும் மக்களின் துயரத்தினை வெளிப்படுத்தி அவர்களை நோக்கி ஆதரவுக்
கரம் நீட்டியிருக்கிறது.

காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில்
தமிழகத்திலின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும்
எழுத்தாளர்கள் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கண்டனக் கவிதைப் போராட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்திய கவிஞர் லீனா
மணிமேகலை, அகதிகளாகி ஈழத்தமிழர்கள் படும் அவலங்களை எடுத்துரைத்ததுடன்,
அப்பிரச்சனை குறித்த அரசியல் மௌனங்களைச் சாடிப்பேசினார். பறையொலிக்கும்,
கற்பனை வளம் மிகுந்த ஒப்பாரிக் கலைஞரான லஷ்மியின் பிரலாபத்திற்கும்
அலையோசை பின்னணி இசைத்தது. பல்வேறுபட்ட உணர்வுடையவர்கள்,
கருத்துடையவர்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காகக் கூடியிருப்பதையிட்டு
மகிழ்வதாக கவிஞர் சுகிர்தராணி தனது உரையில் குறிப்பிட்டார். கவிஞர் இன்பா
சுப்பிரமணியம் பேசுகையில், "நமது முதுகில் இருக்கும் உலகத்திற்குக்
கண்கள், காதுகள் மட்டுமே இருக்கின்றன. வாய் கிடையாது. அதனால் நாம்
பிரயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்"என்றார். எந்த அரசையோ
தனிமனிதரையோ சாடிப் பேசுதல் ஆகாது என்ற நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி,
அத்தனை கவிஞர்களுக்குமிடையில் சப்பணமிட்டு அமர்ந்திருந்ததை நிகழ்வு
நெடுகிலும் காணக்கூடியதாக இருந்தது.

யவனிகா ஸ்ரீராம், எஸ்.தேன்மொழி, கம்பீரன், தமிழச்சி தங்கபாண்டியன், தாரா
கணேசன், கு.பழனிச்சாமி, ராஜா சந்திரசேகர், தமிழ்ச்செல்வன், செல்வகுமாரி,
சரவணகுமார், மரகதமணி, நிஷாந்தினி, பாலை நிலவன், அக்கினி சிவகுமார்,
அ.வெண்ணிலா, லதா ராமகிருஷ்ணன், பழ.புகழேந்தி, கண்டராதித்தன்,
அய்யப்பமாதவன், ஸ்ரீதேவி, டி.எஸ்.எஸ்.மணி, சக்தி அருளானந்தம், இளங்கவி
அருள், பத்தினாதன், சுகுணா திவாகர், இன்குலாப், இளம்பிறை, கோணங்கி,
பாக்கியம் சங்கர், சல்மா பிரியதர்சன், நரன், கு.உமாதேவி, ராஜதுரை,
வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்நதி, பிரியம்வதா,இசை,கனகபாரதி,ஐகோ, யாழன் ஆதி,
இன்பா சுப்பிரமணியம், பவுத்த அய்யனார், வ.கீதா, அ.மங்கை, ரேவதி, உமா
ஷக்தி பிரசன்னா ராமஸ்வாமிஅபிலாஷ், விஜயலஷ்மி, கனிமொழி, சுகிர்தராணி,
தினகரன், சந்திரா, கிருஷாங்கினி, ஆனந்த், செந்தமிழ் மாரி, யூமா வாசுகி,
ரமேஷ் பிரேதன், அரங்கமல்லிகா இவர்களோடு மேலும் பலர் கவிதை வாசிப்பில்
கலந்துகொண்டனர். செம்பை மணவாளன், றொபேட், ரவி சுப்பிரமணியன் ஆகியோரால்
இடையிடையே உணர்வெழுச்சி மிக்க பாடல்களும் பாடப்பட்டன.

ஈழத்துக் கவிஞர்களான கருணாகரன், சேரன், பா.அகிலன், சிவரமணி ஆகியோரின்
கவிதைகளும் அங்கு வாசிக்கப்பட்டன. ரவி சுப்பிரமணியனின் கணீரென்றதும்
உருக்கமானதுமான வாசிப்பு அக்கவிதைகளை மெய்யான பொருளில் வெளிக்கொணர்ந்தன.

கவிஞர் யூமா வாசுகி தனதுரையில், 'கவிஞர்களின் கண்டனப் போராட்டமானது
உணர்வெழுச்சி மிக்க எதிர்ப்புக்குரல்'என்றார்.
மதியத்தின் பின்னான நிகழ்வுகளை எழுத்தாளர் கோணங்கி, கவிஞர் ரவி
சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்தளித்தனர். கவிஞர்களின் போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து கனடாவிலிருந்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம், கவிஞர்
இளங்கோ, இலண்டனிலிருந்து எழுத்தாளர் நாகார்ஜுனன் ஆகியோர் அனுப்பியிருந்த
அஞ்சல்கள் அக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டன. இறுதியாக, வளர்மதியின்
நெறியாள்கையில் நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலையை மையமாகக்
கொண்ட அவ்வளிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றது.

கண்டனப் போராட்டத்தின் தீர்மானங்களை தமிழில் கவிஞர் லீனா மணிமேகலையும்
ஆங்கிலத்தில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும் வாசித்தார்கள். பல்வேறு
ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு : தமிழ் நதி

December 8, 2008

Please continue your good work ......

We, Tamils, are extremely grateful for your efforts to save Tamils in Sri Lanka from genocide. Please continue your good work till Tamils are allowed to live peacefully with dignity.

Thank you.

Yours truly,

Rathini Nisakaran
Canada

we need your full support for ever.

I am really please with your care/attention to the tamils issue.

please keep doing and we need your full support for ever.

Thanks
Prabha
Toronto
Canada

உங்களின் பாச உள்ளங்களுக்கு எங்களின் அன்பு கலந்த நன்றிகள்

அன்புசால் கவிநாயகர்களே!
உங்களின் பாச உள்ளங்களுக்கு எங்களின் அன்பு கலந்த நன்றிகள்.
வாருங்கள் இந்த நாசகாரர்களின்மேல் அறம்பாடுவோம்.எரிந்து சாம்பராகட்டும்
சிங்களம்.
அன்புடன்
கணபதி
Toroto
Canada.

ஈழத் தமிழருக்கான கவிதைப்போருக்கு நன்றி

வணக்கம்,
தங்களின் ஈழத் தமிழருக்கான கவிதைப்போருக்கு நன்றி. தாங்கள் கொண்ட எழுச்சி ஈழத்தில் தமிழரின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, நிமதியான வாழ்வு கிடைக்கும்வரை தொடர வேண்டும்.
நன்றி.
அன்புடன்,
சண்முகம்,
கனடா.

தமிழ் என்ற மொழியைப் பேசுவதற்காகவே ஒரு இனம் ஈழத்தில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது -இளங்கோ

தமிழ் என்ற மொழியைப் பேசுவதற்காகவே ஒரு இனம் ஈழத்தில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. விழுகின்ற விமானக்குண்டுகளும், ஏவப்படுகின்ற எறிகணைகளும், கைது செய்யப்பட்டு நிகழ்த்தபடுகின்ற சித்திரவதைகளும், காணாமற்போதல்களும் 'தமிழன்/தமிழச்சி' என்ற ஒரே அடையாளத்தோடு இருப்பதால் மட்டுமே ஈழத்தமிழர்களைத் தேடித்தேடி, ஆதிக்கச்சக்தி தனது இராட்சதக் கரங்களை படரவிட்டுக் கொண்டிருக்கின்றன. கவிஞர்கள்/படைப்பாளிகள் தாம் வாழும் சமுகத்திலிருந்து மிக அந்நியப்பட்டவர்கள் என்ற பொதுப்புத்தியை விலத்தி ஈழத்திலிருக்கும் தமிழர்களுக்காய் சக மானுடர்களாய் கண்ணீர் சிந்தவும், 'நீங்கள் தனித்தவர்கள் அல்ல நாமிருக்கின்றோம்' என்ற நம்பிக்கையை மிக உறுதியாய்க் கொடுககவும் முன்வந்திருக்கும் கவிஞர்களாகிய உங்களை நன்றியுடன் நினைவிலிருந்திக்கொள்கின்றேன்.

ஈழத்தமிழர்கள் வேண்டிநிற்பது, தாம் பூர்வீகம் பூர்விகமாய் வாழ்ந்த நிலப்பரப்பில் எவரது கண்காணிப்போ/கட்டுப்பாடோ இன்றி கைவீசிச் சுதந்திரமாய் நடப்பதை. எமது மண்ணில் எமது மக்கள் தமது விருப்புக்களோடு வாழ்வதை ஏற்றுக்கொள்ளாத எந்த அரசும் எமது மக்களுக்கு உரித்தான அரசல்ல. ஈழத்திலிருக்கும் மக்கள் தம் சுயவிரும்பில் தமது தெரிவுகளையெடுத்து தாம் விரும்புவதைச் செயற்படுத்த ஒரு நீதியான, சமத்துவமான தீர்வு முன்வைக்கப்படவேண்டும். அதுவே எம் மக்களுக்கான சுபீட்சமான வாழ்வைக் கொடுப்பதற்கான ஒரு முன் நிபந்தனையாக அமையும். இவையெல்லாவற்றையும் விட உடனடி யுத்தநிறுத்தம் செய்யப்படுவது, எல்லாவித அழிவுகளிலிருந்தும் தப்புவதற்கு ஈழத்தமிழர்களுக்கு அவசியமாகின்றது. மக்களைப் பாரிய படுகொலை செய்து வெற்றியைக் கொண்டாடி ஆட்சிப்பீடத்திலேறும் அரசுகள் அரசுகளேயல்ல, பேய்களே ஆகும்.

இளங்கோ

அன்பார்ந்த கவிஞர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கு-நாகார்ஜுனன்.

அன்பார்ந்த கவிஞர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கு

இன்று சென்னையின் பெயர்பெற்ற மெரினா கடற்கரையில் காந்தியார் சிலை அருகே இந்தக் கவிதை அரங்கு நடக்கிற இந்தத்தருணத்தில், உங்கள் அனுமதியுடன், இந்த ஒருசில கணங்களை எடுத்துக்கொள்கிறேன்.

இந்தக் கவிதை-அரங்கை ஒப்பாரி என்று நீங்கள் அழைத்தது, இந்தக் கடலும் கடற்கரையும் ஏராளமான வன்முறையைச் சாட்சியாகக் கண்டவை, கண்டுகொண்டிருப்பவை என்பதை உணர்ந்தே என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டின் மீனவர்களும் இலங்கையின் தமிழ்மக்களும் ஏன் பிற மக்களும் கண்ட ரத்தம், இந்தக் கடலின் உப்புநீரில் சுவையில் கலந்த ஒன்றுதான்.

இவர்களையும் நம்மையும் பிரிக்கும் கடற்பரப்பு இருபதே மைல் தான் - அந்தப்பரப்பில் இருப்பவர்களும் நம்முடைய மீனவ சமுதாயத்தினர்தான். ஆனால் நம்முடைய வாழ்வுக்கும் இவர்களுடைய மரணத்துக்கும் உள்ள தூரம்தான் எத்த்னை! அது இன்னமும் பெருகிகொண்டே போகிறது. அதைக் குறைக்க முடியாத சோகத்தில்தான் நாம் அனைவரும் இன்று ஒன்றாக இணைகிறோம்.

அதேவேளை, ஐயாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து உங்களுடன், இலங்கையில் சமாதானம் வேண்டும் என்ற உங்கள் ஆதங்கத்தை என்னால் உணர முடிகிறது. உங்களில் ஒருவனாக நானும் இங்கில்லையே என்ற ஏக்கமும் என்னிடம் இருக்கிறது.

ஈழத்தமிழர்களின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும் நம்முடைய இந்த உணர்வு, இன்று தமிழ்நாடெங்கும், தென்னகமெங்கும், இந்தியாவெங்கும் எதிரொலிக்க வேண்டும். கால் நூற்றாண்டாக இலங்கையில் நடந்துவரும் போர் ஓய வேண்டும், அங்குள்ள் ஈழத்தமிழ்மக்களின் இன்னல்களும் துயரங்களும் ஓய வேண்டும், இலங்கை அதிபரிடம் இந்திய அரசும் பன்னாட்டு அரசுகளும் வற்புறுத்தி அதைச் சாதிக்க வேண்டும், விடுதலைப்புலிகள் சமாதானத்தை ஏற்றுப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும், தமிழ்மக்கள் தங்கள் நியாயமான சமத்துவ உரிமைகளைப் பெற்று தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்ற ஆதங்கம் எங்கும் பரவியிருக்கிறது.

ஆனால் இலங்கையிலிருந்து தற்போது வந்துகொண்டிருக்கும் செய்திகள், வெற்றிச்செய்திகள் அல்ல. மாறாக, பெரும் கவலை தரும் செய்திகள். ஒருபுறம் உக்கிரமான போர், அதில் முன்னேறிவரும் அரச படைகளுக்கு முகம் கொடுத்துப் போரிட வேண்டிய நிலையில் விடுதலைப்புலிகள். மறுபுறம், அரச படைகளின் தாக்குதலை அடுத்து, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து துரத்தப்பட்டு அனைத்தையும் தொலைத்து வன்னிப்பகுதியில் நிர்க்கதியாக நிற்கும் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள். இவர்களுக்கு உதவ இன்று யார்தாம் இருக்கிறார்கள்?

சுமார் மூன்று லட்சம் மக்கள், வன்னியில் பரந்தன் மற்றும் புதுக்குடியிருப்புக்கு இடைப்பட்ட பகுதியில் 20 மைலுக்குப் பத்து மைல் என்ற பரப்பில் இருக்கிறார்கள். தினம் நான்கைந்து மணி நேரம் மழை பெய்கிற சூழ்நிலை. உணவு, எரிபொருள், மருந்துகள் எல்லாமே பற்றாக்குறை. நிச்சயமற்ற போர்ச்சூழல். நிச்சயமற்ற எதிர்காலம்.

இந்த நிலையில், போர்-நிறுத்தம் மிகமிக அவசியம். உலகில் இவர்கள் தனியாக இல்லை. இவர்களுடன் நாமும் இருக்கிறோம் என்பதை நிரூபித்தாக வேண்டிய நிலை நமக்கு. நமக்கு நன்றாகத் தெரிகிறது - நிவாரணப்பணி நடப்பதற்கே போர்-நிறுத்தம் மிகமிக அவசியம் என்ற நிலை. இல்லாவிட்டால் இந்த மக்கள் அழிவில் விளிம்பில் செல்வார்கள். இன்று யாரும் மிகமிக அடிப்படையாகச் செய்யவேண்டியது, இந்தத் தமிழ்மக்களைக் காப்பாற்றும் பணியையே.

இந்தப்பணியின் ஒருகட்டமாக எழுத்தாளர்களாகிய நாம் இங்கே ஒன்றுகூடியிருக்கிறோம். நமக்கென்று இருக்கும் இந்த வரலாற்றுப்பணியை நிறைவேற்ற இருக்கிறோம்.... கலைஞர்களாகிய, எழுத்தாளர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குள் உரையாடல், விவாதம், சர்ச்சை எல்லாவற்றிலும் ஈடுபடத்தான் செய்வோம். ஆனால், அதையெல்லாம் தாண்டி இப்படி இணைந்திருக்கிறோம் என்பது, நமக்கெல்லாம் பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயம். இவ்வகையில், நம் மக்களுடைய சோகங்கள் மற்றும் அபிலாஷைகள் அனைத்திலும் நாமும் இரண்டறக் கலந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.. நம் பணி இன்னமும் முடியவில்லை என்பதையும் நினைவில் கொள்வோம்.

இறுதியாக ஓர் அதிமுக்கிய விஷயம் - தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நெடிய கவிதை-வரலாறு உண்டு. ஆனால் இன்று இந்த வன்முறையின் சோகத்துக்கு முன்னே நம்முடைய தமிழ்மொழி ஒடுங்கி நிற்கிறது. நம்முடைய மொழிக்கு முன்பிருந்த அன்பின் வலிமை, அருளின் பெருமை, இன்றும் தொடர்கிறதா என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம்முடைய படைப்புமொழிக்கான எதிர்காலம் பற்றிய கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

உங்கள்
நாகார்ஜுனன்

நினைவோ அதனில் எத்தனை ரத்தம்!

என்
நினைவோ அதனில் அத்தனை ரத்தம்
என்
நினைவோ அதனில் வாவிகள் தங்கும்.
அல்லி மலர்களா அவற்றை மூடும்?
அல்ல.
சாவின் தலைகளே அவற்றை மூடும்.
என்
நினைவோ அதனில் வாவிகள் தங்கும்.
அவற்றின் கரைகளில் காய்வதும் அல்ல
பெண்கள் போடும் கீழ்த்துணி ஏதும்.
என்
நினைவைச் சுற்றும் அத்தனை ரத்தம்.
என்
நினைவின் இடைவாரில் அத்தனை பிணமும்!
பீப்பாய் ரம்மின் எந்திரத் தோட்டா
பீறிடும் ஒளியில் தெளிவாய்த் தூண்டும்
அவச்சொல் பெற்ற கலகம் பலதின்
கொடிய விடுதலை அதீதம் பருகும்
மோகம் கொண்ட பார்வை தன்னில்
என்
நினைவாய்ச் சுற்றும் அத்தனை ரத்தம்!

ஃப்ரெஞ்சுக் காலனியாதிக்கத்தை எதிர்த்துக் கவிதையும் அரசியலும் படைத்த மர்த்தினிக் என்ற பசிஃபிக் தீவின் முன்னாள் மேயர் எமே செஸேர். எமே செஸேர், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மறைந்தார். இவருடைய பெயர்பெற்ற் புத்தகம், தாயகம் திரும்புவதற்கான கையேடு (Le Cahier d'un Retour du pays natal, 1939). இதிலிருந்து நான் தமிழாக்கம் செய்த வரிகள் இவை - நாகார்ஜுனன்.

றஞ்சினி --- ஓர் கடிதம்

றஞ்சினி --- ஓர் கடிதம்....ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் போர் உக்கிரமடைந்துகொண்டிருக்கிறது ,போர் நிற்பதற்க்கான எந்த அழுத்தங்களும் நிகழ்வுகளும் அங்கு காணப்படவில்லை போர் உச்சமடைந்துகொண்டிருப்பதைத்தவிர.. .. இறந்துகொண்டிருக்கும் மக்கள், அனாதரவாக விடப்பட்டமக்கள் .இந்தக்கொடுமைகளுக்குள் இயற்க்கையிடமும் சிக்கித்தவிக்கும் மக்களின் நிலை ..இழப்புக்கழும் ,அழிவுகள் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழகத்தில் மக்கள் , கலைஞ்ஞர்கள் , எழுத்தாளர்கள் , தமது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது நாம் அங்கு இல்லாவிட்டாலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு சந்தோசத்தை நம்பிக்கையைக்கொடுக்கிறது. உங்களுடன் சேர்ந்து எம் உணர்வுகளையும் தோழமையும் இத்துடன் தெரிவிக்கிறேன்... மெரினா கடற்க்கரையில் நடக்கும் இந்த ஒப்பாரி கவிதை நிகழ்வு ஈழத்தமிழர்களுடன் இலங்கை அரசால் நீண்ட வருடங்களாக தொடர்ந்து கொல்லப்படும், துன்புறுத்தப்படும் மீனவ தோழர்களுக்கான ஒப்பாரியாகவும் இருக்கிறது இதில்பங்குபெறும் அனைத்து எழுதாள கவிதாயினிகள் ,கவிஞ்ஞர்கள், நண்பர்களுக்கும் மற்றும் அனைத்துமக்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்கழும்
தோழமையும்..

றஞ்சினி.

December 5, 2008

ஜீவன் ஜெகன்

எறிகணை (செல்) வீச்சைக் கண்டித்து சொல் வீச முன்வந்த கவிஞர்களுக்கு நன்றிகள்.


-ஜீவன் ஜெகன் -

Shan Nalliah/ Norway....

Dear Poets!

I greet you all to do your best on Poem Stage on 07-12-08 and publish this as a historical collection...

-Shan Nalliah/ Norway-

அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு ஆதரவு மடல்

அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு ஆதரவு மடல்
ஒரு காலத்தில் 'மாமொத்' என்ற பாரிய உடல் கொண்ட பனியானை இந்தப் பூமியில்
வாழ்ந்தது. 4500 வருடங்களுக்கு முன்னர் அந்த யானை இனம் அழிந்துபோனது.
நான் வாழும் கனடா நாட்டில் ஒரு காலத்தில் Dawson Caribou என்ற மான் இனம்
பல்கிப் பெருகி வாழ்ந்தது. ஆனால் 1984ம் ஆண்டுக்கு பிறகு அந்த மான்
இனத்தை ஒருவரும் காணவில்லை. முற்றிலுமாக அழிந்துவிட்டது.
2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் நியூயோர்க்கில் இருக்கும் The
American Museum of Natural Hiostory அருங்காட்சியகத்துக்கு
போயிருந்தேன். அங்கே பாடம் செய்யப்பட்ட புறாவகை ஒன்றை விஞ்ஞானி
காட்டினார். அதன் பெயர் passenger pigeon. கொலம்பஸ் அமெரிக்காவை
கண்டுபிடித்த சமயத்தில் அங்கே 300 கோடி புறாக்கள் ( passenger pigeons)
இருந்தனவாம். இப்பொழுது ஒன்றுகூட இல்லை. கடைசிப் பறவை 1914ல்
இறந்துவிட்டது. அதைத்தான் பாடம் செய்து வைத்திருந்தார்கள்.
இந்தப் பூமியில் ஆதியிலிருந்து உயிர்கள் தோன்றுவதும், பரிணாமத்தில்
வளர்ச்சியடைவதும் பின்னர் அழிவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இப்பொழுது அதே மாதிரி இலங்கையில் ஓர் அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்து நடக்கும் தமிழ் இன அழிப்பு இப்பொழுது
உச்சக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. உலகத்திலே எங்கேயாவது ஓர் அரசு தன்
மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி அழித்திருக்கிறதா? அது இலங்கையில்
தினம் நடந்துகொண்டிருக்கிறது. எம் கண்முன்னே தமிழ் இனம் மெல்ல மெல்லச்
சாகிறது.
இந்தச் சமயத்தில் போரில் சிக்கி அழிவை நோக்கி செல்லும் ஈழத் தமிழினத்தின்
விடிவை வேண்டி தமிழகத்தின் அன்பு உள்ளங்கள், கவிஞர்கள் டிசம்பர் ஏழாம்
தேதி மெரினாவில் கண்டனக் கவியரங்கம் நடத்துவதாக அறிகிறேன். இது என்னுடைய
நெஞ்சை மாத்திரமல்ல உலகெங்கும் பரந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சங்களின்
மனதையும் நெகிழ்வடைய வைத்திருக்கிறது.
கவிஞர்களின் கண்டனக் கூட்டம் சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காகவும்,
ஈழத் தமிழர்களின் விடிவு நிசமாகவேண்டும் என்பதற்காகவும் என்
பிரார்த்தனையை செலுத்துகிறேன்.

அன்புடன்
அ.முத்துலிங்கம்

இலங்கை இன படுகொலைக்கு எதிரான கண்டன கவிதை பேரணி - பங்கேற்கும் கவிஞர்கள்

1. விக்ரமாதித்தியன்

2. ஞானக்கூத்தன்

3. கலாப்ரியா

4. கோணங்கி

5. கல்யாண்ஜி

6. சுகுமாரன்

7. பிரபஞ்சன்

8. இந்திரன்

9. இன்குலாப்

10. சா. தமிழ்ச் செல்வன்

11. ரசூல்

12. காமராசு

13. யவனிகா ஸ்ரீராம்

14. மனுஷ்ய புத்திரன்

15. ரமேஷ் பிரேம்

16. திலகவதி

17. வெளி ரங்கராஜன்

18. லஷ்மி மணிவண்ணன்

19. பாலை நிலவன்

20. பெருமாள் முருகன்

21. பாமா

22. மாலதி மைத்ரி

23. அ.மங்கை

24. வா. கீதா

25. பூமா ஈஸ்வர முர்த்தி

26. குட்டி ரேவதி

27. க்ருஷாங்கினி

28. லதா ராமகிருஷ்ணன்

29. வெண்ணிலா

30. இளம்பிறை

31. யாழன் ஆதி

32. லீனா மணிமேகலை

33. சுகிர்தராணி

34. உமா மகேஸ்வரி

35. தமிழச்சி தங்கபாண்டியன்

36. இன்பா சுப்பிரமணியன்

37. வியாகுலன்

38. நட சிவக்குமார்

39. ரவீந்திர பாரதி

40. ஐய்யப்ப மாதவன்

41. அஜயன் பாலா

42. என். டி. ராஜகுமார்

43. சமயவேள்

44. பவா செல்லதுரை

45. குமார் அம்பாயிரம்

46. கண்ட ராதித்தன்

47. ஸ்ரீநேசன்

48. ரவி சுப்பிரமணியன்

49. நா. முத்துக்குமார்

50. யுகபாரதி

51. தாமரை

52. ஆ. வேங்கடாசலபதி

53. அழகிய சிங்கர்

54. யூமா வாசுகி

55. ராஜ மார்த்தாண்டன்

56. நஞ்சுண்டன்

57. நெய்தல் கிருஷ்ணன்

58. ஸ்ரீகுமார்

59. குவளை கண்ணன்

60. சூரிய நிலா

61. அனுசியா

62. நந்தமிழ் நங்கை

63. கவிப்பித்தன்

64. சுந்தரபுத்தன்

65. அருள் எழிலன்

66. ஸ்டாலின் ராஜாங்கம்

67. கீதாஞ்சலி பிரியதர்சன்

68. முத்துக் கிருஷ்ணன்

69. சூரியச் சந்திரன்

70. பாரி கபிலன்

71. அரச முருகுபாண்டியன்

72. அழகுநிலா

73. தென்றல்

74. நீலகண்டன்

75. இந்திரா

76. பெரியசாமி ராஜா

77. தமிழ் நதி

78. ராஜா சந்திர சேகர்

79. தேவி பாரதி

80. வெளி ரங்கராஜன்

81. பால் நிலவன்

82. அமிர்தம் சூர்யா

83. முனியப்ப ராஜ

84. செல்வா புவியரசன்

85. தக்கை சாகிப் கிரன்

86. இசை

87. இளங்கோ கிருஷ்ணன்

88. விருத்தாசலம் ஹரி

89. ஆண்டாள் பிரியதர்சினி

90. அரங்க மல்லிகா

91. சந்திரா

92. கவிதா

93. பிரேமா ரேவதி

94. ஜெயராணி

95. அனிச்சம்

96. பழனிவேள்

97. பிரான்சிஸ் கிருபா

98. திலகபாமா

99. அழகிய பெரியவன்

100. பாக்கியம் சங்கர்

101. ஹரன் பிரசன்னா

102. விஸ்வா மித்திரன்

103. பா. முருகன்

104. தேவேந்திர பூபதி

105. சல்மா

106. வளர்மதி

107. ராணி திலக்

108. செல்மா பிரியதர்சன்

109. எஸ். தேன்மொழி

110. இளவேனில்

111. இராஜேந்திரன்

112. கூத்த லிங்கம்

113. மனோன்மணி

114. அபிலாஷ்

115. குலசேகரன்

116. பிரியம்வதா

117. பெனித்தா

118. செந்தமிழ் மாரி

119. உமா சக்தி

120. விஜய லெட்சுமி

121. பிராபாகரன்

122. விவேகானந்தர்

123. மெய்யருள்

124. தாரா கணேசன்

125. உமா தேவி

126. சி. ராஜதுரை

127. தபசி

128. செல்வகுமார்

129. கவிமனோ

130. யூசுப்

131. ஜ.எஸ். தயாளன்

132. கமலம் அசோக்

133. கிருஷ்ண கோபால்

134. ராஜ நாச்சியப்பன்

135. பாலு

136. சங்கர்

137. சிவ பாஸ்கரன்

138. கம்பீரன்

139. நரன்

140. கென்

141. மரகதமணி

142. ஐய்யனார்

143. நிஷாந்தினி

144. ரா. சின்னசாமி

145. லெட்சுமி சரவணகுமார்

146. மருதா பாண்டியன்

147. சிவ குருநாதன்

148. உமா பார்வதி

149. பரமேஸ்வரி

150. கறிச்சோறு முத்து

151. கா. வை. பழனிச்சாமி

152. கு. சின்னசாமி

153. கி. சரவணகுமார்

154. பழ. புகழேந்தி

155. செந்தூரம் ஜெகதீசன்

156. வைகை செல்வி

157. நிலாப்பிரியன்

158. சக்தி அருளாநந்தம்

159. முருகேஷ்

160. கி. சரவணக்குமார்

161. பா. தமிழ்ச் செல்வன்

162. ராஜேஸ்வரி

163. சங்கவை

164. ஸ்ரீபதி பத்பநாபா

165. எழிலரசி

166. சு.மு. அகமது

167. தென்பத்தி நாதன்

168. ரங்கசாமி

169. டாக்டர். சோம சேகர்

170. டாக்டர். சி. லெட்சுமணன்

171. மணி

172. கவின் மலர்

173. ஆரிசன்

174. ஜஷா

175. முஜபுர் ரகுமான்

176. சிவா

177. ஆனந்த்

178. அ. ரோஸ்லின்

179. அம்சப்பிரியா

180. இளங்கவி அருள்

இலங்கை இன படுகொலைக்கு எதிராய் சில சொற்கள் - லக்ஷ்மி மணிவண்ணன்

ஈழ தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரி தமிழ் கவிஞர்களின் கண்டனம் - சில சொற்களோடு

ஒவ்வொரு இனத்திற்கும், அதன் உள்புறத்தில் இயங்கும் இனக்குழுக்களுக்கும், நீண்ட மரபுடனும் சடங்குகளுடனும் வழிபாடுகளுடனும் கூடிய அகவுடல் ரசசியங்களால் அமைந்திருப்பது. உரிமைகளை, எதிப்பை, பாதுகாப்பை, உறவை அவை உரிய வழிகளில் ரகசியங்களை பேணிய வண்ணம் எதிர்கொள்ள இயலாமல் போகும் போது வெடிப்புறத் தொடங்குகிறது.

மானுடவியல், இனவரையியல் போன்ற அறிவுக் கருவிகள், ஊடகத் தகவல்கள் ஆகியவை இனங்களை, சமூகங்களை, குழுக்களை அறிய உதவுவது போன்ற பாவனைகள் மட்டுமே, அறிவுக் கருவிகள் மூலம் சமூகத்தின் ஒரு பண்பை அறிய முயலும்போது அறிய இயலாத பகுதிகளை, ஊடக வழிகள் கொண்டும் பொதுப் புத்தி சார்ந்தும் இட்டு நிரப்பும் முயற்சி முடிவில் அடிப்படை உள்ளுணர்வின் எதிர்ப்புணச்சிக்கு இலக்காவது தவிர்க்க இயலாதது.

பொதுப் புத்தி என்பது மக்களின் பார்வை என்பதல்ல. மாறாக அது முன்னேற்றம், வளர்ச்சி, வெற்றி, பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பதங்களின் ஊடாக வறண்ட கற்பனையை களியூட்டுகிற அரசின் செயல் ஆகும், மனித உயர் உணர்வின் உயர்ந்த பட்ச சாத்தியங்களை, தன்னிச்சையான கற்பனையின் விகாரத்தை இது தடை செய்யும் செயலும் ஆகும். இச் செயல்பாட்டின் ஒரு பகுதியான பொதுப்புத்தி என்பது படைப்புச் செயல்பாட்டுக்கு நேர் எதிர் திசையில் கதி நிலை பெற்றிருந்தலின் அபாயத்தை பல திசைகளில் எதிர் கொள்ளும் திசையில் இன்றைய மனித இருப்பின் ஆதாரம் குழப்பமடைந்திருக்கிறது. உயர் மனசாட்சியின் எதிர்ப்பாக ரகசியங்களின் அறச்செயல்பாடாக துப்பாக்கிச் சத்தத்தை பெருகச் செய்தது. எதிர்ப்பிற்கு மௌனத்தையும் அலட்சியத்தையும் முகம் காட்டும், தனிமனித பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாகக் கூறும் உலக முழுதும் விரிந்துள்ள ஒற்றைபடை நாகரீக ஜனநாயக அரசு ஆகும்.

தனி மனிதப் பாதுகாப்பை முன்னிறுத்தி, சமூகங்களை அலட்சியம் செய்யும் இவ்வரசு எதையும் பாதுகாக்க இயலாத நிலைக்கு பின் தள்ளப்பட்டு விட்டது.

இந்நிலையில் இவ்வரசுக்கு அப்பாற்பட்டு, பொதுப்புத்தி, அரசியல், ஊடகம், ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டு கவிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோர்களின் தற்கால சமூகப் பொறுப்புகள் என்னென்னவாக அமைய வேண்டும். இவை நமது பொது சுயத்தின் விசாரனைக்கு உட்பட்டவை, இவ்விசாரணையே வருங்காலங்களில் ஜனநாயக அரசுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே நிகழவிருக்கும், மோதல்களின் போது சகல விதமான வாழ்தலின் சுதந்திரத்தை மீட்கவும் வலியுறுத்தவும் நமக்கு உதவும்.

இந்த அடிப்படையிலேயே ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் போருக்குத் தமிழ் கவிஞர்கள் தங்கள் உணர்வின் பொது வெளிப்பாடாக கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

மாறுபட்ட வாழ்க்கைப் பின்புலனும் வரலாறும் கொண்ட ஈழத் தமிழர்களின் படைப்புகள் சுயதன்மையும் சுய வரலாறும் கொண்டவை. தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் ஈழத் தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் தனித்து அறியப் படவேண்டியவை. தமிழினம் என்று ஒற்றை இனப் பார்வையை முன்னிறுத்தும் ஊடகமறதி அரசியல் குரல்களிலிருந்து படைப்புக் குரல்கள் மாறுபட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகில் எந்தவொரு இனமும் எந்தவொரு காரணத்தின் பெயராலும் ராணுவத்தின் தலைமையோடு ஒழிக்கப்படுவதை தமிழ் கவிஞர்கள் எதிர்க்கிறோம். அவ்வகையில் ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவப் போரை தமிழ் கவிஞர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்க் கவிஞர்கள் இக்கண்டனத்தைத் தெரிவிக்கும் இச் சந்தர்ப்பத்தில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவிக்கும் கோரிக்கைகள் இவை.

1. உலக அளவில் ஈழத் தமிழ் அகதிகள் – தமிழகத்தில்தான் வேறெங்கு நடப்பதைக் காட்டிலும் மலிவான முறையில் நடத்தப்படுகிறார்கள். அவமானத்திற்குள்ளாகிறார்கள் மனிதவுரிமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் கண்காணிப்பிற்கிலக்காகிறார்கள். அகதிகள் முகாம்கள் சிறைக் கூடங்களுக்கு ஒப்ப அமைந்துள்ளன. சமூக அவமானங்களும் சமூக அநீதிகளுக்கும் ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் இலக்காகிறார்கள். மனிதவுரிமைகளின் அடிப்படையில் இவற்றை களைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2. ஈழத் தமிழ் படைப்பாளிகளின் நூற் பதிப்புகளுக்கு தமிழகம் முக்கியத்துவமளிக்க வேண்டும். ஈழத் தமிழ் படைப்புகளும், வரலாறும் மாணவர்களின் பாடத் திட்டங்களில் இடம் பெறவேண்டும். செம்மொழி திட்டங்களில் ஆய்வுகளில் ஈழத் தமிழுக்கு உரிய இடம் தரப்பட வேண்டும்.

3. ஈழத்தில் வட இந்திய பன்னாட்டுமுதலாளிகள், முதலாளிகள் நில ஆக்ரமிப்பு செய்வதையும், இந்திய அரசு அதற்கு ஊக்கமாகத் திகழ்வதையும் தமிழக அரசு கண்டித்து ஈழ தமிழ் நில ஆக்ரமிப்புகளை தடுக்க வகை செய்ய வேண்டும். அம்மக்களுடனான நேர்மையான உறவு வலுப்பட இது உதவும்.

4. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர் தாக்குதலுக்கு இலக்காவது இந்திய அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான செயலின்மையை காட்டுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.

5. இலங்கை ராணுவத்திற்கான ராணுவ ஒத்துழைப்பை இந்திய அரசு கைவிடுவதோடு ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் போரை நிபந்தனைகளற்று உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து பின்னர் பேச்சுவார்த்தையைத் துவங்கவேண்டும்.

November 30, 2008

எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல் - செல்மா பிரியதர்ஸன்

எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல்.

இது இறுதிப் போர் என்று அறிவித்து சிங்கள ராஜபக்சே அரசு ஏவுகணைகளையும் எறிகுண்டுகளையும் ஈழத் தமிழர்களின் குடியிருப்பின் மேல் உடமைகள் மேல் வாழ்வாதாரங்களின் மேல் எறிந்து வருகிறது. இலங்கையின வரைபடத்திலிருந்து தமிழர்களை துடைத்து எறியும் இறுதி நடவடிக்கையாக சிங்கள அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. உயிர் பிழைத்திருக்க முப்பது ஆண்டுகளாக அத்தீவைவிட்டு வெளியேறி உலகம் முழுவதும் அகதிகளாக வாழ்ந்து வருகிறது ஈழத் தமிழனம.; கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் குடியிருப்புகளைவிட்டு வெளியேறி வனாத்திரங்களில் முகாம்கள் அமைத்து பசியிலும் நோயிலும் பிழைத்து வருகிறார்கள். உணவுப் பொட்டலங்களுக்குப் பதிலாக அணுகுண்டுகளை விட மோசமான உயிர்க்காற்றை ( ஆக்ஸிஜனை) உறிஞ்சுகிற உக்கிர குண்டுகளை அவர்களுக்கு உணவாக வழங்குகிறது ராஜ பக்சே அரசு. எப்போதும் போல் தமிழ்ப் பெண்களின் உடல்கள் மேலும் நீட்டிக்கப்படும் போரின் செயல்பாடுகள். சிங்கள அரசிற்கு பொருளாதார இராணுவ உதவிகளைச் செய்துவரும் நம் இந்திய அரசோ இந்தியாவிற்கு (தமிழகத்திற்குள்) வரும் போர் அகதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி தனது சொந்தப் பொறுப்பில் பராமரிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துகிறது.

மத்திய அரசில் அதிகாரத்தினை பங்கு போட்டிருக்கும் தமிழ் மாநில அரசியல் கட்சிகளோ அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மீது விறைத்த பற்றுடன் செயலாற்றி வருகிறது.

தமிழ் மொழியில் கவிதைகள் எழுதிவரும் நாங்கள் நிலவிவரும் சூழல்களையும் நிலவரங்களையும் அறிந்திருக்கிறோம். ஒரு சமூகத்தில் மொழியில் இயங்கும் கவிஞர் என்பவரின் வரம்புகளையும் சாத்தியங்களையும் உணர்ந்தே இருக்கிறோம். அழிந்து வரும் அரிய உயிரினத்தின் மாதிரிகள் போல நாம் வாழும் காலத்தில் ஈழத் தமிழினம் கண்களின் முன்னால் அழிந்து வருவதைக் காணச் சகியோம் எங்களிடம் அதிகாரம் இல்லை ஆயுதங்கள் இல்லை ஆட்சி இல்லை. வார்த்தைகள் மட்டுமே உள்ளது சிங்கள அரசின் தமிழ் ரத்தம் பருகும் இராணுவ வெறிமீது ஏவுகணைகள் போல் வார்த்தைகளை வீசுவோம். தமிழனத்தின் விடுதலைமீது வாழ்வுமீது பாரா முகமாய் இருக்கும் தமிழக அரசியல் மௌனத்தின் மீது தற்கொலைபோல் வார்த்தைகளாய் விழுவோம். தேசம் என்று நம்பி வாழும் இந்தியப் பாராளுமன்றத்தின் மனசாட்சியை நோக்கி மரணம் போல வார்த்தைகளை எறிவோம், கண்ணீர் சிந்துவோம், ஒப்பாரி வைப்போம், தூற்றுவோம் சாபமிடுவோம்.

தமிழகத்தில் கவிஞர்கள் பல்வேறு குழுக்களாக, வேறுபாடுகள் உடையவர்களாக இருந்து வந்த போதிலும் எல்லா வித்தியாசங்களையும் கடந்து சென்னை மெரினா கடற்கரையில் டிசம்பர் 7-ல் ஒன்று சேர்கிறோம். தமிழகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் சொந்த தார்மீகத்தில் கடற்கரை நோக்கிப் பயணிக்கிறோம்.

தமிழ்க் கவிஞர்களின் கண்டனக் கவிதைப் போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள அனைத்து எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், மாணவர்களையும், பொதுமக்களையும் அழைக்கிறோம்.

செல்மா பிரியதர்ஸன்

கண்டன கவிதைப் போராட்டத்திற்கான வெளிச்சத்தின் ஆதரவு

தமிழக கவிஞர்களுக்கு வெளிச்சம் நன்றி தெரிவிக்கின்றது. எங்கிருந்தாலும் நீங்கள் ஈழத்தமிழர்களின் தொப்பூள்கொடி


தமிழக கவிஞர்கள் எழுகிறார்கள்! ஈழத்தமிழர்களுக்காக கண்டன கவிதைப்போராட்டம்!
ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றுமாறு கோரி தமிழகத்தின் கவிஞர்கள் ஒன்று திரண்டு கண்டனக்கவிதைப்போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருகின்றார்கள்.

எதிர்வரும் டிசம்பர் 7 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையருகே இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகின்றது.

சுமார் 150 க்கும் அதிகமான கவிஞர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்கள் இன்று பட்டு வரும் அவலங்களை தங்களது கவிதைகளாக பதிவு செய்யவுள்ளனர்.

இந்த கண்டனக்கவிதைப்போராட்டத்தில் கவிஞர்கள் தவிர்ந்த ஆயிரக்கணக்கான
பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்
என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈழத்தமிழ்களுக்கு ஏதிரான வன்கொடுமைகளையும், அநீதிகளையும் கண்டிப்பதே இந்த போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்தியை அனைத்து தமிழ் ஊடகங்களும் வெளியிட்டு ஈழத்தமிழர்களுக்காக தமிழக கவிஞர்கள் நடத்தும் உணர்வுப்போராட்டத்தை உலகறியச்செய்யுங்கள்!

தொடர்புகளுக்கு

9841043438, 9884120284, 9952089604
tamilpoets@gmail.com
www. tamilpoets.blogspot.com


உறவுகள் அல்லவா?.உங்களது போராட்டம் வித்தியாசமானது. வரவேற்கின்றோம். தொடரட்டும் உங்கள் போராட்ட உணர்வு.

உங்கள் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் மத்தியில்

பரப்புரை செய்யும் வகையில் வெளிச்சம் செய்திகளை வெளியிட காத்திருக்கிறது. தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உங்களது வித்தியாசமான கண்டனக்விதைப்போராட்டம் குறித்த செய்திகளை வெளிச்சம் வெளியிட்டிருக்கின்றது.

உங்கள் போராட்டம் வெற்றி பெற வெளிச்சம் வாழ்த்துகின்றது.

நிர்வாகக்குழு
வெளிச்சம்.
velichcham com

November 24, 2008

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து ,
தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும்

கண்டனக் கவிதைப் போராட்டம்.

இடம் :
சென்னை மெரீனா கடற்கரையில்,
காந்தி சிலையருகே

நாள் : டிசம்பர் - 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை

நேரம் :
காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை


நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி,
இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து
தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.

அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.

சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோருவோம் !

தொடர்புக்கு

மின்னஞ்சல் : tamilpoets@gmail.com

செல்பேசி : 9841043438, 9884120284, 9952089604

இவண் தமிழ்க் கவிஞர்கள்