June 21, 2009

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

நிகழ்வு 2

இடம்: AICUF அரங்கம் - சென்னை
நாள்: 26 ஜுன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை

முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.

பன்முக வாசிப்பு:

பெயல் மணக்கும் பொழுது /தொகுப்பாளர்: அ.மங்கை
வ.ஐ.ச ஜெயபாலன்

எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்சன்

சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
ராஜேஸ்வரி

இருள் யாழி/ திருமாவளவன்
யாழன் ஆதி

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை/ தீபச் செல்வன்
அரங்க மல்லிகா

தனிமையின் நிழற்குடை/ தா அகிலன்
சுகுணா திவாகர்

புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன/ மஜீத்
சந்திரா

நாடற்றவனின் குறிப்புகள்/ இளங்கோ
சோமிதரன்

கருத்தாளர்கள்:

அ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தொடர்புக்கு: லீனா மணிமேகலை - 9841043438

June 8, 2009

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் 'தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்' முன்னெடுக்கிறது.

நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும் பண்டம், சந்தை, போர், மரணம் என்னும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என விமர்சனப்பூர்வமாகப் பகிரங்கப்படுத்துவது தொடர்ந்து சிந்திப்பது, எழுதுவது, ஒன்றுகூடுவது, இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் இன்னொரு முயற்சி இது:

 

இடம்: வால்பாறை
நாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறு

வரவேற்பு: கரிகாலன்
அரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்

அரங்கம்: கமலாதாஸ் அரங்கம்
கமலாதாஸ் எழுத்துகளும் நினைவுகளும்: மாலதி மைத்ரி

திறனாய்வுகள்:

1. சாராயக் கடை/ ரமேஷ் பிரேதன்
இளங்கோ கிருஷ்ணன்

2. நிசி அகவல்/ அய்யப்ப மாதவன்
அசதா

3. திருடர்களின் சந்தை/ யவனிகா ஸ்ரீராம்
ம. மதிவண்ணன்

4. தேர்ந்தெடுத்த கவிதைகள்/ கரிகாலன்
க. மோகனரங்கன்

5. என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்/ யூமா வாசுகி
வெ.பாபு

6. உலகின் அழகிய முதல் பெண்/ லீனா மணிமேகலை
க. பஞ்சாங்கம்

7. சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
மனோன்மணி

8.தெய்வத்தைப் புசித்தல்/ செல்மா பிரியதர்ஸன்
எச்.ஜி.ரசூல்

அரங்கம்: ராஜமார்த்தாண்டன் அரங்கம்


ராஜமார்த்தாண்டன் கவிதையும் வாழ்வும் சுகிர்தராணி

1. உனக்கும் எனக்குமான சொல்/ அழகிய பெரியவன்
யாழன் ஆதி

2. எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்ஸன்

3.உறுமீன்களற்ற நதி/ இசை
கரிகாலன்

4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்
இளஞ்சேரல்

5.துறவி நண்டு/ எஸ். தேன்மொழி
விஷ்ணுபுரம் சரவணன்

6. நீ எழுத மறுக்கும் எனது அழகு/ இளம்பிறை
கம்பீரன்

7. கடலுக்கு சொந்தக்காரி/ மரகதமணி
எஸ். தேன்மொழி

கருத்தாளர்கள்:

சுந்தர்காளி, பிரேம், சஃபி, ராஜன்குறை, வியாகுலன், சுகன்,  நட. சிவக்குமார், முஜுப்பூர் ரஃமான், சாகிப்கிரான், ரவீந்திரபாரதி, மணிமுடி,யதார்த்தா ராஜன்

கவிதை வாசிப்பு

தா.அகிலன், நிசாந்தினி, ஜீவன் பென்னி, வெயில், கணேசகுமாரன், அமுதா

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

செல்மா பிரியதர்ஸன் -9443461476
சுகிர்தராணி -9443445775
யாழன் ஆதி -9443104443
வித்யாசாகர் -9842209993

நிகழ்ச்சித் தொகுப்பு: லீனா மணிமேகலை
நன்றியுரை: வித்யாசாகர்

February 21, 2009

தமிழீழத்துக்கு ஆதரவாக தலைநகரில் ஒலித்த குரல்

அறிவு யுத்தம் செய்வோம்

Stop the war in Srilanka என்று அச்சிடப்பட்ட கருப்பு வண்ண 'டி.சர்ட்' அணிந்து 'ஈழ மக்கள் தோழமைக் குரல்' அமைப்பினைச் சேர்ந்த தோழர்களின் பயணம் பிப்ரவரி பத்தில் சென்னையில் தொடங்கி டில்லி மண்டி ஹவுஸ் பகுதியை பிப்ரவரி பனிரெண்டில் அடைந்தது. ஒவ்வொருவரின் கைகளும் சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒவியர்கள் இராப் பகலாய் வரைந்து தந்த நூற்றுக்கணக்கான கைப்பதாகைகளை ஏந்தியிருந்தன. அவைகளில் போர் நிறுத்தம், ஈழ மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை, தமிழ் மீனவர்களின் கோரிக்கைகள், அகதிகளின் மாண்புரிமை ஆகிய முழக்கங்கள் அடங்கியிருந்தன. மண்டி ஹவுஸ் இருக்கும் பகுதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. பறை காய்ச்ச தீ மூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் காய்ச்சிய பறைகளை புத்தர் கலைக்குழுவினர் அடிக்க, ஊர்வலம் புறப்பட்டது.
ஜந்தர்மந்தர் வரை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடைப்பயணம் நடந்தது. பேருந்துகள், மகிழுந்துகள் , தானிகளில் சென்ற பயணிகள் கைப்பதாகைகளைப் படித்துக் கொண்டே சென்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 'போரை நிறுத்து, போரை நிறுத்து, ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்து, இந்திய அரசே போரை நிறுத்து, காந்தி தேசம் கொல்வதா, புத்த தேசம் அழிப்பதா, எங்கள் ரத்தம் ஈழத்தமிழர் ரத்தம், விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடங்கும் போர்' என்பது போல பல முழக்கங்கள் டில்லி குளிர்க்காற்றில் கலந்து தேசிய இனங்களின் காதுகளை அறைந்தது. முன்னால் பறையிசையும் அதற்கு அடுத்து படைப்பாளிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், மீனவ நண்பர்களும் அதனை தொடர்ந்து மாணவர்களும் பேரணியில் அணிவகுத்தனர். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களும், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்களும், கலைஞர்களும் இந்த பேரணியில் முக்கிய பங்காற்றினர்.
பாராளுமன்றத்தை நெருங்க நெருங்க ஊர்வலத்தில் வந்தவர்களின் உள்ளங்களில் உத்வேகம் கூடிக்கொண்டே இருந்தது. பாராளுமன்ற வீதியை நெருங்க காவலர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்க ஈழ மக்கள் தோழமைக்குரல் தோழர்கள் நிறுத்தப்பட்ட இடத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். சிறிது முன்னேறி மீண்டும் வேறு ஒரு இடத்தில் காவலர்கள் தடுக்க அங்கேயும் சாலையிலேயே அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். டில்லி மற்றும் தேசிய ஊடகவியலாளர்கள் வழி ஈழ மக்கள் தோழமைக் குரலின் செய்திகளும், கோரிக்கைகளும் நாடெங்கும் சென்று சேர்ந்தது.

பிறகு புத்தர் கலைக்குழுவின் குரலிசைக்கலைஞர் மகிழினி அவர்கள் ஈழம் சார்ந்த துயரங்களை ஒப்பாரிப்பாடலாகப் பாடினார். பறையிசையும் பாடல்களும் பாராளுமன்ற தெருவை வெம்மையாக்கின. சமர்ப்பா குமரன் அவர்கள் பாடிய பாடல்கள் எழுச்சி கொள்ள வைத்தன. இதற்கிடையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தர்ணாவிற்கான ஏற்பாட்டினையும் ஒலி பெருக்கியும் ஏற்பாடு செய்தனர். 33% இட ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தி முடித்த பெண்கள் இயக்கத் தோழர்கள் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர் தோழர் ஆனி ராஜா அவர்களின் தலைமையில் ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போரை நிறுத்தக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்றனர். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினை மட்டுமல்ல, மானுடத் துயர் என்றும், அந்த துயரைத் துடைக்க தம்மால் ஆனவற்றையெல்லாம் செய்வோம் என்றும் ஆதரவு குரல் எழுந்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் உரைவீச்சு உணர்வுகளை ஒன்றிணைத்தது. டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் முழக்கங்களை இந்தியில் எழுப்ப, பெருங்கூட்டம் திரண்டது.
போராட்டத்தின் இறுதிக்கட்டம் உணர்ச்சிமிக்கதாக அமைந்தது. சமர்ப்பா குமரன் பாடிய 'செவல மாடு கட்டியிருக்கும் சலங்க ஒடியட்டும்; சிங்களவன் கொட்டமடிக்கும் இலங்க ஒடியட்டும்' பாடலுக்கு எல்லாரும் இணைந்து ஆட ஆரம்பிக்க வேகம் கூடிக்கொள்கிறது. பல்வேறு இடங்களிலிருந்த மக்கள் எல«¢லாரும் அங்கே வந்து ஒருமித்தனர். இந்த நேரத்தில் டில்லி மாணவர் அமைப்பை சார்ந்த ஆதிகேசவன் அவர்கள் இந்தியில் பேசிய இறுதி உரை அனைவரையும் கவர்ந்தது. இலங்கை அரசின் கொடூரம், இந்திய அரசின் துரோகம், தமிழக அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை தேர்தல் சந்தையில் விற்கும் நிலைப்பாடு ஆகியவற்றை குறித்து சூடான விவாதங்களோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது.

இந்திய இறையாண்மைக்கு விழுந்த பலத்த அடி

ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பின் சார்பில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஈழத்தமிழர் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தக் கோரியும் தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளும் போராட்டம் தொடர்ந்தது.ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள பாராளுமன்ற வீதியில் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலில் போரை நிறுத்த வலியுறுத்தும் முழக்கங்களுடன் எழுத்தாளர்கள், மாணவர்கள்,மீனவ அமைப்பினர், டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர். சமர்ப்பா குமரன் புத்தர் கலைக்குழுவோடு இணைந்து எழுச்சிப்பாடல்களைப் பாட பறையிசையும் ஆட்டமும் பந்தலின்முன்பு வெவ்வேறு சமூகப் பிரச்சினைகளுக்காகக் கூடியிருந்த மற்ற மாநிலப் போராளிகளின் கவனத்தை ஈர்த்தது.

உறவுகளை இழந்தவர்கள் தலைமுடி நீக்குவது என்பது தமிழர்களின் மரபுவழிப் பண்பாடு. ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாகவும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மொட்டை போடும் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினார்கள். பறையும் வாழ்த்தொலியும் வேகமாக எழும்ப சாமுவேல், ரமேஷ்,டில்லிராஜ்,வினோத்குமார் மற்றும் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் ஆகியோர் மொட்டை அடித்து தங்கள் உணர்வு களை வெளிப்படுத்தினர். இது சுற்றியிருந்த அனைவரையும் வேறொரு தளத்தில் பிரச்சினையின் தீவிரத்தை உணர வைத்தது. அருகே வைகோ உண்ணாவிரதம் இருந்ததால் மதிமுக தொண்டர்கள் வந்து ஈழத்தமிழர் ஆதரவுக் குரல் அமைப்பினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.திடீரென ராஜபக்சேவின் படத்தை அனைவரும் செருப்பால் அடித்தனர்.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் பற்றி கேள்விப்பட்ட தமிழக மற்றும் பாண்டிச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு வந்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், கிருஷ்ணன், பா.ம.க. உறுப்பினர்கள் கு.ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, மோகன் ஆகியோ£¢ உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர். கு.ராமதாஸ் அவர்கள் உரையாற்றும் போது 'எத்தனை முறை கேட்டும் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. நீங்கள் இங்கே வந்து போராடியதன் விளைவுதான் இன்று பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்தச் சொல்லி பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துவோம். அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்றார். போராட்டத்திலிருந்த மாணவர்கள் இந்தியா போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டும் என்று முழக்கம் எழுப்பினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். ஈழத்தில் மிகவும் கொடுமையான முறையில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். 'ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்திய அரசு ஒருவகையில் காரணமாகவே இருக்கின்றது. போரை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருந்தாலும் அதுவே போரை நடத்திக் கொண்டிருப்பதுதான் மிகவும் கொடுமை. இந்திய அரசு போரை நிறுத்தவேண்டும் என்று பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரக்க குரல் எழுப்புவேன்' என்று உரையாற்றினார். யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் உரையும், கலந்துரையாடலும், ஈழத்தின் அவலத்தை உக்கிரமாக பதிவு செய்து, ஈழ மக்களின் விடுதலைப் போராட்டதை அங்கீகரிக்கும் அவசியத்தை அனைத்து தளங்களிலும் அழுந்த எடுத்துச் செல்லும் உத்வேகத்தைத் தந்தது.

இச்சூழலில் போராட்டவாதிகளில் ஒரு பிரிவினர் கவிஞர் லீனா மணிமேகலை, கவிஞர் மாலதி மைத்ரி, ஊடகவியலாளர் இன்பா சுப்ரமணியம், எழுத்தாளர் கோணங்கி, கவிஞர் யவனிகா ஸ்ரீராம், அஜயன் பாலா உள்ளிட்ட குழுவினரும் மாணவர்கள் வெங்கடாசலம்,பிரபாகரன், தர்மேந்திரன் ஆகியோர் கொணட குழுவும் மற்றும் மனித உரிமையாளர்கள் தனம், மஹேஷ், மீனவ இயக்கத் தோழர்கள் லிங்கன், பாரதி என 28 பேர் இலங்கை தூதரகம் முன் சென்று முற்றுகைப் போராட்டமும் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பும் நடத்த புறப்பட்டனர். தூதரகம் முன் சென்றதும் தாங்கள் கொண்டுவந்த ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையை மிகுந்த ஆவேசத்துடன் செருப்பால் அடித்தனர். ராஜபக்சேவின் உருவப்படத்தினை மிதித்தும் அதை கொளுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறே இருந்தனர். பெண்கள் I am your sister rape me, I am your mother rape me, Leave our sisters in Eelam என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். தூதரகத்தினை காவல் காத்த காவலர்கள் துப்பாக்கிகளுடனும் நீண்ட தடிகளுடனும் வந்து சூழ்ந்து நின்றனர். இதனால் அப்பகுதி ஒரு போர்க்களம்போல் காட்சியளித்தது. இதற்கிடையில் டெல்லி காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக் காரர்களைச் சூழ்ந்து கொண்டது. திடீரென அனைவரும் 'போர் நிறுத்தம் செய்' என்று கத்தியவாறே அந்த முக்கிய சாலையில் சென்று படுத்து மறியல் செய்தனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால் காவல்துறை போக்குவரத்தை வேறு சாலைப் பக்கம் திருப்பியது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து இலங்கை அரசு, ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். காவல்துறை அவர்களைக் கைது செய்து சாணக்கியபுரி காவல்நிலையத்தில் வைத்தது. 'கைது செய்யப்பட வேண்டியது ராஜபக்சேதான்; நாங்களல்ல' என்று போலீஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் அவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்குமேல் தீவிர விசாரணைக்குப்பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இது இலங்கைத் தூதரகம் முன் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஜந்தர் மந்தரில் நடந்த உண்ணாவிரதமும் அதன் உச்சகட்டத்தை அடைந்தது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் அனைவரும் உரத்து முழக்கம் எழுப்பினர். ஒவ்வொருவரும் உணர்ச்சிப்பிழம்பாகி இருந்தனர். போராட்டத்தை வாழ்த்த பத்திரிகையாளரும் இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதுவராக பணியாற்றியவரும் தொடர்ந்து மனித உரிமைக்காக எழுதிவருபவருமான குல்தீப் நய்யார் வந்திருந்து பேசினார். சச்சார் அறிக்கையைத் தந்த ராஜேந்திர சச்சார் அவர்கள் போராட்டத்திற்கு வந்திருந்து கலந்து கொண்டவர்களை வாழ்த்தியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பேசினார். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும் வரை அவ்விடத்தைவிட்டு வரமாட்டோம் என்றும் வேண்டுமானால் எங்களையும் கைது செய்யுங்கள் என்றும் உண்ணாவிரதம் இருந்தவர்கள் முழங்கினார்கள்.

அதே நாளில் தன் டில்லி உண்ணாவிரதப் பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ அவர்கள், ஈழத் தமிழர் தோழமைக்குரலின் இலங்கைத் தூதரக முற்றுகை 'இந்திய இறையாண்மைக்கு விழுந்த முதல் அடி' என்று குறிப்பிட்டு பேசினார். ஜெனிவாவில் தீக்குளித்த முருகதாசின் தீ தோழர்களின் மனதையும் பற்றி கொந்தளித்ததில் அன்று இரவு சிவந்து இருண்டது.

அறம் நின்று கொல்லும்

மூன்றாவது நாளும் தொடர்ந்த உண்ணாவிரதத்தில், ரிசர்வ் போலீசும் கலந்து கொணடது என்று தான் சொல்ல வேண்டும். வலுவான பாதுகாப்பு வளையம். அமைதியான வகையில் நாள் முழுதும் டில்லி தோழர்களும், கலைஞர்களும், மாணவர்களும் வருகை தந்த வண்ணம் இருக்க, போராட்டம் வலுப் பெற்றது. போராட்டங்களில் கலந்து கொண்ட ஒவ்வொரு தோழர்களும் தங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளையும், போராடும் சக்திகளை ஒன்று சேர்க்கும் அவசியத்தையும் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்புகளும் கலந்துரையாடல் போலவே நடைபெற்றது. இது ஈழம் குறித்த ஊடகங்களின் தவறான புரிதல்களை, முன்முடிவுகளைக் களைய உதவியது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாலை நடைபெற்ற பேரணியும், கலை நிகழச்சிகளும், கலந்துரையாடலும், பேரெழுச்சியாய் நடைபெற்றது. இந்திய ஏகாதிபத்தியத்தின் நாடி பிடித்து உலுக்கும் வேளை வந்துவிட்டது என்பதே கூடியிருந்த அத்தனை பேரின் உணர்வொருமையாக இருந்தது. ஈழம் குறித்த தேசிய இனங்களின் கொலைகார மௌனத்தை கலைக்கும் பணியை இனி மாணவர்களும், அறிவு சமுதாயமும் மூர்க்கமாக செய்யத் தொடங்கவில்லையென்றால், பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இனப்படுகொலைக்குப் பொறுப்பாகி விடுவோம் என்ற உண்மையை உடைத்து தொடங்கிய விவாதங்களின் ஆவேசம் அறத்தின் மடையைத் திறந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள், முத்துக்குமாருக்கும், உயிர் நீத்த மற்ற நண்பர்களுக்கும் தமிழிலேயே வீரவணக்கம் செய்து முழங்கியது, ஈழ விடுதலையின் குரலை மானுடத்தின் மனசாட்சியாக ஒலித்துக் காட்டியது.

February 9, 2009

இந்திய அரசே

இலங்கை இனப்படுகொலைப் போரை தடுத்து நிறுத்து!

ஈழ மண்ணில் இன அழிப்புப் போர் உக்கிரமடைந்து வருகிறது. நான்கு இலட்சம் மக்கள் முல்லைத்தீவின் குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். காடுகளிலும் வயல்வெளிகளிலும் நெருக்கடி மிகுந்த ஆபத்தான வாழ்க்கையை அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். சிங்கள ராணுவம் பன்னாட்டுப் போர் விதிகளை மீறி மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், அகதி முகாம்கள் மீது குண்டுகள் வீசி வருகின்றது. சர்வதேச சமூகத்தால் போரில் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ள க்ளஸ்டர் குண்டுகள், இரசாயன குண்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபன்ட், மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ், ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் எனப் பலரும் இலங்கையில் நிகழும் இனப் படுகொலையை வன்மையாகக் கண்டித்தும் கூட, இனவெறி இராசபக்சே அரசின் பயங்கரவாதச் செயல்பாடுகள் நின்றபாடில்லை.

இந்த இனப்படுகொலைப் போரில் இதுவரை ஒரு இலட்சம் அப்பாவித் தமிழர்கள் இறந்திருக்கின்றனர். மூன்று இலட்சம் தமிழர்கள் காணாமல் போயிருக்கின்றனர். ஒன்றேகால் இலட்சம் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இலங்கைச் சிறையில் அரசியல் கைதிகளில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள்.

''வியட்நாமில் அமெரிக்கப்படைகள் வீசிய குண்டுகளை விடவும் ஈழத்தமிழர் பகுதிகளில் சிங்களப்படைகள் வீசிய குண்டுகள் அதிகம்'' என வாக்குமூலம் தருகிறார் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

இத்தகைய நிலையில்தான் 'இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்து' என தமிழக மக்கள் உரக்க குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்திய அரசு சிறிதும் ஈவு இரக்கமின்றி இக்கோரிக்கையை புறக்கணித்து வருகிறது. போரை நிறுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபடவில்லை எனும் வேதனை ஒருபுறம் என்றால் ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க போர் பயிற்சி, ஆயுத உதவி என மறுபுறம் இலங்கை அரசுடன் பங்காளி உறவு கொண்டாடுகிறது இந்திய அரசு.

இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் தமிழர்கள். பல்வேறு துறைகளில் இதன் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைத்து வருபவர்கள் தமிழர்கள். இத்தமிழர்களோடு மொழி, இன, பண்பாட்டு உறவுகள் கொண்டவர்கள்தாம் ஈழத் தமிழர்கள். சொந்த சகோதரர்கள் சாதல் கண்டு தமிழகத்து மக்கள் இன்று சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.இதன் விளைவுகள், இன்று தமிழக வீதிகளிலெல்லாம் நடைபெறும் தன்னெழுச்சியான போராட்டங்கள்.

அவர்களது நியாயமான கோபங்களை தலைநகர் தில்லியில் பிரதிபலிக்கும் முயற்சிதான் தமிழக மாணவர்கள், படைப்பாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்த 'ஈழத் தமிழர் தோழமைக் குரல்'.

இந்திய தேசிய அறிவு ஜீவிகளே, இந்திய ஒன்றியத்தின் அனைத்து இனங்களைச் சேர்ந்த மாணவர்களே, விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களே, பத்திரிகைத்துறைத் தோழர்களே,ஈழத் தமிழர் அனுபவிக்கும் அரச பயங்கரவாதத்தை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளியுங்கள்.நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய அரசிடம் மேலதிக வலிமையான குரலில் மீண்டும் கேட்போம்.

இந்திய அரசே!

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைப்போரை உடனே தடுத்து நிறுத்து!

தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை, இந்தியாவில் வாழும் அகதிகளின் மாண்புரிமையை உறுதி செய்!

கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது உடனடியாக நடவடிக்கை எடு!

ஈழத் தமிழர் தோழமைக் குரல்

தமிழ்நாடு, புதுச்சேரி, புது தில்லி

ஒருங்கிணைப்புக் குழு:

லீனா மணிமேகலை, சுகிர்தராணி, செல்மா பிரியதர்ஸன், கரிகாலன், அஜயன் பாலா, யாழன் ஆதி, யவனிகா ஸ்ரீராம், கோணங்கி, இன்பா சுப்பிரமணியன், லிவிங் ஸ்மைல் வித்யா, அசதா, காலபைரவன் (தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்)

வெங்கடாசலம் (அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு)

மாலதி மைத்ரி (அணங்கு)

சந்திரன் (மக்கள் சிவில் உரிமைக் கழகம்)

கலையரசன் (தில்லி தமிழ் மாணவர் கூட்டமைப்பு)

பிரேமா ரேவதி (பெண்கள் சந்திப்பு)

கே.டி. காந்திராஜன், நடராஜன் (ஓவியர்கள் இயக்கம்)

பாரதி (தென்னிந்திய மீனவர் நலச் சங்கம்)

விமலா பெரியாண்டி (புதுச்சேரி மீனவப் பெண்கள் கூட்டமைப்பு)

புத்தர் கலைக் குழு, விழுப்புரம்

போராட்ட நிகழ்வு

நாள்: 12.02.2009 இடம்: புதுதில்லி

காலை 10.00 பேரணி ஜந்தர் மந்தரிலிருந்து பாராளுமன்றம் வரை

காலை 11.00 பாராளுமன்றம் முன் முற்றுகைப் போராட்டம்

காலை 12.00 முதல் ஜந்தர் மந்தரில் உண்ணாநிலைப் போராட்டம்

Indian Government!
Stop the war of genocide in Sri Lanka !


The genocidal war against Eelam Tamils in Srilanka is growing intense. 2.5 to 3 lacs are confined within the narrow territorial bounds of Mullai Theevu. Their life in the forests and Corn fields are precarious without adequate shelter, food, and medicines. The Singhalese army continues to bomb hospitals, schools, places of worship and refugee camps, in violation of international human rights norms and war regulations. Weapons like cluster bombs and chemical bombs, forbidden by the international community have been indiscriminately used against the supposed enemies, including innocent civilians.
Though people like Hilary Clinton, the US Foreign Affairs Minister, David Mifant, the British Foreign Affairs Minister, Brad Adams, the Asian Division Director for Human Rights Safety wing and Cordon Weis, the UN News Correspondent have vehemently condemned the Sri Lankan genocide of innocent Tamils, the communal pogrom of the Rajapakshe government continues with audacity.
So far more than 80 thousand innocent Tamils have been killed in the genocide. More than 3 lakh people have been Internally Displaced. More than hundred thousand Tamil women have been brutally raped. And more than eight lakh Tamils have been rendered homeless and have sought asylum in various countries of the world as refugees. UNHRC has recorded “forced disappearance” of more than 5100 Tamil youths from the Srilankan camps. Srilankan human rights groups have reported that the existing camps of Internally Displaced Tamils have virtually become detention camps indulging in “forced disappearances” and hence the call for inviting the Tamils from the war zone to so called “safe zones” by the Srilankan government does not appeal to the suffering Tamils. 99 percent of political prisoners in Sri Lankan jails are Tamils. According to a report by the former Foreign Affairs Minister Mangal Samaraveera, the bombs dropped in Tamil areas by the Singhalese army are more in number than those dropped by USA in Vietnam war.
It is this juncture that the people of Tamilnadu are raising their voices to stop the war and the genocide in Sri Lanka. But the Indian Government is turning a deaf ear to these request. On the one hand, it has not done anything to stop the cruel war. On the other hand, it has also aided the Sri Lankan Government by supplying arms and ammunition and giving military training and thus abetting the annihilation of Tamils in Sri Lanka.
The Tamil people have continued to nurture and strengthen the unity and integrity of the Indian Sub-continent. But, despite several appeals from all sections of people, the inaction and indifference of the Government of India constraints us to believe that it is in fact a war perpetrated and abetted by the Indian forces against the struggling Eelam Tamils.
The Tamils of Eelam , though they have independent national identity, do have umbilical bond by way of ethnic, linguistic and cultural relations with the Indian Tamils. It is but natural that Indian Tamils are anguished owing to genocidal killing of Eelam Tamils in Srilanka. The demonstrations, rallies, general strike and other forms of struggles, including self immolations, in Tamil Nadu in only a natural consequence to voice the protest of the people of Tamil Nadu. The spontaneous protests urges the Indian government to stop abetting the war and prevail upon the Sri Lankan Government to bring an end to the genocidal war. The “voice For Eelam Tamils” is one such expression of moral support to the suffering Sri Lankan Tamils by a federation of students, writers, poets, artists, women groups, fishermen and Human Rights activists.
We appeal to the well meaning Indian intellectuals, students of all castes and creeds of the Indian subcontinent, and supporters of democratic and freedom struggles and friends from the Press to realize that the war in Srilanka is only a state sponsored terrorism unleashed against the innocent Tamils of Sri Lanka now abetted and jointly engineered by the Indian Government, using the Indian tax payers money!Hence, the need of the hour is to call upon the international community to prevail upon the Governments concerned to end the ongoing genocidal war in Sri lanka.
Let us our raise our voice in unison to demand the following:

Oh Indian Government!
1. Stop the Genocidal war against the Tamils of Srilanka.
2. Recognize and uphold the struggle for democracy, dignity, justice and freedom by the Tamils of Srilanka.
3. Invoke the clause of “Right to Protect” of the United Nations Declarations and urge the International Community to initiate action against the Rajapakshe Government for Genocide, war crimes and Crimes against humanity.
4. Initiate action against Srilankan government under national and international law for killing scores of our fishermen by the Srilankan Navy.
5. Facilitate to rush all humanitarian aids to the suffering Tamils through International agencies.
6. Assure a life with dignity for the refugees from Srilanka.

Voice for Eelam Tamils,
Chennai, Pudhucherry, New Delhi.

Organizing Committee:

Leena Manimekalai, Sukirtharani, Selma periyadharshan, Karikalan, Ajayan Bala, Yazhan Aathi, Yavanika Sriram, Konangi, Inba Subramaniyan, Living Smile Vidhya, Asadha, Kalabhairavan (Tamil Poets Movement)

Venketachalam (All College Students Federation, Tamilnadu)

Malathi Maithri (Anangu)

Chandhran (CUPL)

Kalaiyarasan (Tamil Students Federation, New Delhi)

Prema Revathi (Penkal Sandhippu)

K.T. Gandhirajan, Natarajan (Painters Movement)

Bharathi (South Indian fishermen Welfare Association)

Vimala Periyandi (Puducherry fisher women federation)

Buddhar Kalai Kuzhu, Vizhupuram


Protest Programme

12.02.2009 New Delhi
10.00 AM Rally from Jandhar Mandhar to Parliament
11.00 AM Protest in front of Parliament
12.00 AM Relay Fast starts at Jandhar Mandhar

December 20, 2008

அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்தல்

செல்மா பிரியதர்ஷன்

சம்பவம்: 1


நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் லீனா மணிமேகலையிடமிருந்து தொலைபேசி அழைப்பு. தமிழ் நாட்டிலுள்ள கவிஞர்களை எல்லாம் ஒன்றிணைத்து ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கக் கோரி ஒரு கண்டன கவிதைப் போராட்டத்தை நடத்தலாம். ஓப்பாரி போராட்டம் என அதற்குப் பெயரிடலாமா?

தொடர் நிகழ்வு:

கவிஞர்கள் சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியம், நரன் உடனிணைந்து தமிழில் எழுதிவரும் நவீன கவிஞர்களின் தொலைபேசி எண்களை சேகரித்தார்கள். மாவட்டந்தோறும் பல்வேறு அரசியல் நிலைப்பாடுள்ளவர்கள், குழுக்கள், தனியர்கள் என சாத்தியப்பட்டவரை அனைவரிடமும் தொலைபேசி கருத்து கோரப்பட்டது.

ஏதாவது செய்தாக வேண்டும். ஒப்பாரிப் போராட்டம் என்பது சரிதான். கவிஞர்கள் வேறு என்ன செய்வது? ஒப்பாரி என்றால் செத்த பிணங்களுக்கு முன் அழுவது மட்டுமில்லையே. ஒப்பாரி என்பது ஒரு கதை சொல்லும் முறை. வரலாறைச் சொல்லலாம். இறந்த பிணங்களைக் காட்டி காரணமானவர்களை குற்றம் சுமத்தலாம். கோரிக்கையிடலாம், அழலாம், ஆர்ப்பரிக்கலாம், கோபப்படலாம், சாபமிடலாம், தூற்றலாம்.

இல்லை. இதில் உடன்பாடில்லை. இது போராட்ட வடிவமில்லை. என்ன ஒப்பாரி? கவிஞர் என்பவர் மூக்கு வழிய அழுது கண்ணீர் சிந்துபவரா? இது அவ்வளவு அரசியல்பூர்வமாக இல்லை. துல்லியமாக வெகு காத்திரமான போராட்டமாக இருக்க வேண்டும்.

சரி. கண்டன கவிதைப் போராட்டம் என்று அறிவிப்போம். அதற்குள் ஒப்பாரி பாடுபவர்கள் பாடிக்கொள்ளட்டும். பரணி, எதிர்பரணி பாடுபவர்கள் பாடட்டும்.
எழுத்தாளர்கள், கலைஞர்களையும் உள்ளடக்கி விரிவடைந்த போராட்டமாக அறிவிக்கலாமே?

தமிழகத்தில் எண்ணிக்கையில் கவிஞர்கள் அதிகம். மேலும் அவர்களுக்கான பொது மேடை அதிகமாக இல்லை. அனைத்துக் கவிஞர்களின் குரல்களும் ஒலிக்கப்படவேண்டும். உரைகளை தவிர்த்துவிட்டு கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். எழுத்தாளர்கள் கலைஞர்கள் அனைவரது ஆதரவையும் கோருவோம். பத்திரிக்கைகளுக்கு தகவல் அளிப்போம்.

டிசம்பர் 6 வரை

கவிதைப் போராட்டம் குறித்து கவிஞர்கள் பேசிக்கொண்டார்கள். அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளும் பலருடனும் பேசிய வண்ணம் இருந்தனர்.

அவரை இன்னும அழைக்கவில்லை
என்னை இன்னும் அழைக்கவில்லை
இல்லை. இது தனியொருவர் நடத்தும் நிகழ்ச்சியோ, குடும்பவிழாவோ இல்லை, சேகரித்த, தொடர்பு கொள்ள முடிந்த அனைத்து எண்களையும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் பெற்றவர்கள் அவர்களோடு தொடர்பிலுள்ளவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. செய்தி எட்டியவர்கள் தொடர்பில் உள்ளவர்களோடு களத்திற்கு வரட்டும்.

போராட்ட அறிவிப்பு

இது யார் நடத்தும் போராட்டம்
கவிஞர்கள் இணைந்து நடத்தும் போராட்டம்
நாம் நடத்தும் போராட்டம்

தலைநகரில் வசிக்கும் லீனா மணிமேகலை தமிழச்சி, குட்டிரேவதி, தமிழ்நதி, இன்பா சுப்ரமணியம், வெளிரெங்கராஜன், ஐயப்ப மாதவன், ஆனந்த், நரன், கென் ஆகியோர் அடிக்கடி சந்தித்து ஆயத்தப்பணிகளை செய்தனர்.

இந்த டிசம்பர் 6 பயங்கரவாதிகளின் நாச வேலைகளுக்கு சென்னைதான் இலக்கு என்ற செய்தி பரவலாக பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் வெளிமாவட்டத்திலிருந்து ரெயில் மற்றும் பேருந்துகளில் வந்து சேரவேண்டியவர்கள் வந்து சேர்ந்தனர். சென்னையில் வசிப்பவர்களோடு முந்தைய நாளே வந்து சேர்ந்த சுகிர்தராணி, யவனிகா ஸ்ரீராம், செல்மா பிரியதர்ஸன், கம்பீரன், இசை ஆகியோர் இணைந்து அடுத்த நாளைய போராட்ட நிகழ்ச்சியைத் திட்டமிட்டார்கள். கோரிக்கைகளை விவாதித்து இறுதிப்படுத்தினார்கள்.

சம்பவம் : 2

போராட்டம் குறித்து பத்திரிக்கைகளில் விளம்பரம் தரவில்லை. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கவில்லை. தலைமை, சிறப்பு விருந்தினர்கள் என்று தனியொருவர் எவரையும் முன்னிலைப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி டிசம்பர் 07-ல் கண்டன கவிதைப் போராட்டம் நிகழ்ந்தேறியது. தமிழகம் முழுவதும் இருந்து கவிஞர்கள் தங்களது சொந்த செலவில், சொந்த பொறுப்பில், சொந்த தார்மீகத்தில் வந்து கலந்து கொண்டார்கள். எழுத்தாளர்கள் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டியது. இன்குலாப். பாமா போன்ற மூத்த தலைமுறையினரிலிருந்து நிஷாந்தினி, லஷ்மிசரவணக்குமார் போன்ற இளையதலைமுறையினர் வரை தங்களது மனக்கொதிப்பை பதிவு செய்தார்கள். கனிமொழி வந்து கவிதை வாசித்துச் சென்றார். சுகிர்தராணி, கோணங்கி, யவனிகாஸ்ரீராம், ரவிசுப்ரமணியம், யாழன்ஆதி, இன்பா, ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். இறுதியாக வளர்மதி எழுதி பிரசாத், தமிழச்சி ஆகியோர்களோடு இணைந்து இயக்கிய வம்சவதம் என்ற கவிதை நாடகம் ஐநூறிற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.

நவீன தமிழ் கவிஞர்களின் தன்னிச்சையான முதல் கவிதை இயக்கம்:

இங்குள்ள இலக்கிய இதழ்கள், முகாம்கள், முகமைகள், அதிகாரத்தோடு தொடர்புடைய இலக்கிய அமைப்புகள் ஆகியவைகளின் வரம்பெல்லைகளுக்கு வெளியே நிகழ்ந்திருக்கும் தன்னிச்சையான இக்கூட்டிணைவானது வரலாற்று முக்கியத்துவம் உடையது. வேறொரு இலக்கிய அமைப்போ, இதழோ, வேறொரு இலக்கிய நிகழ்விற்கு இருநூறு கவிஞர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்றால் பயணம், தங்குதல், உணவு ஆகியவற்றிற்காக மட்டுமே இரண்டு இலட்சம் ரூபாய் செலவு செய்தாக வேண்டியிருக்கும்.

எது எப்படியோ, இலக்கியத்திற்கு வெளியே ஒரு பொதுப்பிரச்சினைக்காக இருநூறு கவிஞர்கள் தங்கள் அத்தனை வேறுபாடுகளுடனும் ஒன்றிணைந்தது மாற்றத்தின் அறிகுறி. இப்போராட்டம் ஒரு இயக்கமாக வடிவெடுத்திருக்கிறது. "நவீன தமிழ்க் கவிஞர்களின் தன்னிச்சையான முதல் கவிதை இயக்கம்" என்று இதனைக் குறிப்பிடலாம். இதனை ஒரு ஆரம்பமாகக் கொள்ளலாம். இனி சமூக அரசியல் கலாச்சார தளங்களில் ஏற்படும் பொதுப்பிரச்சினைகளின் மீது சமூகத்தின் மனசாட்சியாய், மனவிழைவாய், சமரசமற்று தங்களது மூர்க்கமான குரலை ஒலிப்பவர்களாக கவிஞர்கள், தங்களை இயக்கமாக உணர்நது சமூகச் செயல்பாடுகளை நோக்கியும் திரள வேண்டும். இந்த ஒன்றிணைவு பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய காட்சிகள்:

இம்முறை ஆண்டின் மழைக்காலத்தை சிங்கள அரசு தேர்ந்தெடுத்தது. "பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை ஓயமாட்டோம். இது இறுதிப்போர்" என்று ராஜபக்சே அறிவித்தது பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. திருப்பியனுப்பப்பட்ட நார்வே தூதுக்குழு பிரபாகரனோடும், சிங்கள அரசோடும் பல ஆண்டுகளாக அரசியல் ரீதியான பேச்சு வார்த்தை நடத்தியபோது பிரபாகரன் என்பவர் சிங்கள அரசிற்கு யாராக இருந்தார்? ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும பிரபாகரனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒருவேளை இந்திய அரசு கோரியதா?. பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுடன் ஒப்படைப்பதற்கான போர்தான் இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்றதா? இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் கொலைக்கு காரணமான இன்னொருவரை பிடிக்கத்தான் ஈழத்தமிழ்களின் வாழ்விடங்களின் மீது குண்டுகள் வீசப்படுகிறதா?. பல்லாயிரக்ணக்கான குடியிருப்புகள் அழிக்கப்படுகிறதா? ஈழத்தமிழர்கள் வாழ்விடமற்று வனப்பகுதியில் முகாம்கள் அமைத்துப் பிழைப்பதற்கும், தங்க இடமற்று இம்மழைக் காலங்களில் பாம்புகளிடம் கடிபட்டு சாவதற்கும், காட்டு மரக்கிளைகளின் தொட்டில்களில் உறங்கும் குழந்தைகளின் இரத்தத்தை அட்டைகள் உறிஞ்சுவதற்கும், பள்ளிகளில் இருந்து குழந்தைகள் வெளியேற்றப்படுவதற்கும், உறுப்புகள் இழந்த தமிழ் உடல்களைக் கொட்டிப்போடும் இடமாக வகுப்பறைகள் மாறியதற்கும், முகாம்களில் பசிக்கு ஏந்தப்படும் பாத்திரங்களின் மீது மீண்டும் குண்டுகளைப் போடுவதற்கும், இன்னும் இலங்கை நிலத்திலிருந்து தமிழனத்தை கழுவி வாரி ஊற்றுவதற்கும் சொல்லப்படும் ஒரே காரணம் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்பது.

சிங்கள அரசின் கூற்றிற்கு இந்திய அரசின் அதிகாரபூர்வமான பதில் என்ன? சிங்கள இராவணுத்திற்கு பயிற்சிகள் அளிப்பதுவும், தொடர்ந்து பொருளாதார உதவிகள் செய்து வருவதையும் எப்படிப் புரிந்துகொள்வது? இலங்கை அமைச்சர்கள் தமிழக அரசியல்வாதிகளை இழிவாகப் பேசுவதையும், இந்தியாவிலுள்ள இலங்கை தூதரங்களில் விருந்துகள் நடைபெறுகையில் கலந்து கொள்பவர்களையும் அங்கு உருவாகும் சதித் திட்டங்களையும் மத்திய அரசு கண்டும் காணாமல் ஏன் நடந்து கொள்கிறது? மத்திய ஆட்சியில் அதிகாரத்தை பங்கு போட்டிருக்கும் தமிழக கட்சிகளும், தமிழக அரசும், மத்திய அரசிற்கு தங்களால் தரமுடிந்த நெருக்கடி இவ்வளவுதானா?

சம்பவம் 3

சில எதிர் வினைகள்:

ராஜிவ் காந்தி படுகொலைக்குப்பின் தமிழ்நாட்டில் தற்பொழுதுதான் ஈழத்தமிழர்கள் குறித்து அரசியல் ரீதியாக பேசும் நிலை இங்கு உருவாகியிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் உறைந்திருந்த மௌனத்தின் மீது கவிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், அறிவு ஜீவிகள், என்ன வினையாற்றினார்கள்?

இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வை இங்கிருக்கும் தமிழர்களாலோ, கட்சிகளாலோ, படைப்பாளர்களாலோ ஏற்படுத்தி விட முடியுமா?

இங்கு போராட்டம் நடத்துவதாலோ, கூட்டங்கள் போடுவதாலோ, ஒப்பாரி வைப்பதாலோ, ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்து போகுமா?

தமிழகத்தில் எத்தனையோ எரியும் பிரச்சினைகளின்போது அமைதி காத்த படைப்பாளிகள், தலித்துகளின் உடல், வாழ்வு, உடமைகள் மீது அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கும்போது, படைப்பாளிகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடுவது பாதுகாப்பானது.

மலேசியாவில் தமிழர்கள் ஒடுக்கப்படும்போது குரல் கொடுக்காத படைப்பாளர்கள் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் போது மட்டும் ஏன் குரல் கொடுக்கிறார்கள்?

தமிழக முதல்வர் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு குரலை எழுப்பிய பின்னர் இங்கு நடைபெறும் அத்தனை போராட்டங்களும் அரசாங்கத்திற்கு கீழ் நடைபெறுவதுதான்.

தமிழகத்தில் சில காட்சிகள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி இயக்கங்களை தொடங்குகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தொடர்ந்து இயக்கங்கள் நடத்துகிறது.

தமிழகத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களை முதல்வரிடம் ஒப்படைக்கிறார்கள்.

தமிழக திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், கூட்டங்கள் போடுகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கைதாகி வெளியில் வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை அரசிடம் அளிக்கிறார்கள். பெருநிதியையும், பொருட்களையும் திரட்டி தமிழக அரசு பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அனுப்புகிறது.

தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், இந்தியப் பிரதமரை சந்தித்து மனு கொடுக்கிறார்கள்.

அரசுக்குக் கீழ் வாழ்வதும், அரசின் மனச்சாட்சியை தொந்தரவு செய்வதும்:

ஒரு கவிஞரோ, படைப்பாளியோ, எல்லாரையும்போல அரசுக்குள்தான் பிறக்கிறார்கள். கற்கிறார்கள், வாழ்கிறார்கள். அரசு அளிக்கும் அடையாள அட்டையை பத்திரமாக வைத்து கொண்டு அரசுப் பண்டக சாலைகளில் பொருட்கள் வாங்கி, தின்று, குடித்து வரிசையில் நின்று வாக்களித்து, காவல்துறைக்கு, நீதிமன்றத்திற்கு, அரசியல் சாசன விதிகளுக்குக் கீழ் பிழைத்திருக்கப் பழகுகிறார்கள். மிகுந்த தன்னுணர்வும், விடுதலை வேட்கையும் உடைய இவர்கள்தான் முதலில் அதிகாரங்களை கண்டறிகிறார்கள். அதிகாரம் எங்கிருந்து உருவாகிறது, எவ்வாறு பரவுகிறது, கட்டுப்படுத்துகிறது. எல்லைகளுக்கும் விதிகளுக்கும் கீழ் மந்தைகளை திரட்டி எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதை அறிகிறார்கள். இவர்கள் அதிகாரத்தோடு எப்படி உறவை பேணுகிறார்கள். சிலர் துணை போகலாம், உடந்தையாயிருக்கலாம். ஒரு எல்லை வரை இணங்கி வாழலாம். இணங்கி வாழ்வது போல் பாசாங்கு செய்யலாம். இணங்கி வாழ்ந்து அரசை மக்களுக்கு காட்டிக் கொடுக்கலாம். உள்ளுக்குள் இருந்தே விலகி நிற்கலாம், முரண்டு பிடிக்கலாம், ஊடறுக்கலாம், எதிர்த்து நிற்கலாம், பலியாகலாம். பிறகு அரசுக்கு வெளியே இருந்து செயல்படுவது என்றால் என்ன என்பதைச் சொல்ல வாக்காளர் அட்டை வைத்திருக்கும் நமக்கு அரசியல் சாசன விதிகளில் இடமில்லை. அது ஒரு பெருங்கனவும் கூட.

டிசம்பர் 07-ல் நடைபெற்ற கவிதைப் போராட்டம் எங்கு நடத்தவேண்டும், எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை நடத்தவேண்டும் என்று நமக்கு அனுமதி அளித்தது காவல்துறை. அரசின் கண்காணிப்பு நிறுவனமான காவல்துறையின் அனுமதிக்குக்கீழ் தேர்ந்தெடுத்துத் தரப்பட்ட இடத்தில், நேரத்தில் அது விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஒரு பந்தலைப் போட்டு அமர்ந்தோம்.

நிபந்தனைகள் இரண்டு

1. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை பற்றியோ அதன் தலைவரையோ ஆதரித்துப் பேசக்கூடாது.

2. இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், ஊறுவிளைவிக்கும்படி குரல் எழுப்பக் கூடாது.

இங்கு கவிஞர்களோ, படைப்பாளிகளோ அதிகாரங்களோடு கொண்டுள்ள உறவில் ஒரே மாதிரித் தன்மையுடையவர்களாக இருக்க முடியாது. முழுவதும் அடங்கிப்போவது முழுவதும் இணங்கிப் போவது என்ற நிலையில் பலரும் இருந்தாலும், இணங்குவது போல் இணங்கி முரண்டுவது, எதிர்க்குரலை வார்த்தைக்குள் மறைத்துப் பதுக்கி வைப்பது, சில நேரங்களில் வெளிப்படையாய் ஒலித்துப் பார்ப்பது என்ற வகையில் ஒரு கலவையான தன்மையுடைதாகத்தான் இருக்கும். அந்தக் கவிதைப் போராட்டத்தின் பந்தலுக்குள் படைப்பாளிகளின் குரலொடுக்கம் நடந்தது. அரசுக்குக் கீழ் அடங்கி ஒலித்தது என்று தட்டையாக்கி கூறுவது பொறுப்பற்ற, பக்குவமற்ற, பொதுப்புத்தி சார்ந்த சமூக இயங்கியலின் மீது எந்தப் புரிதலுமற்ற படைப்பு மனமற்ற குறைபாடுடைய பார்வைதான்.

போராட்டத்திற்கு முன்னரே "எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல்" என்ற பதிவிலிருந்து சில வார்த்தைகளை இங்கு நினைவுப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

"தமிழ் மொழியில் கவிதைகளை எழுதிவரும் நாங்கள் நிலவிவரும் சூழல்களையும் நிலவரங்களையும் அறிந்திருக்கிறோம். ஒரு சமூகத்தில் மொழியில் இயங்கும் கவிஞர் என்பவரின் வரம்புகளையும் சாத்தியங்களையும் உணர்ந்தே இருக்கிறோம். அரிய உயிரினத்தின் மாதிரிகள் போல நாம் வாழும் காலத்தில் ஈழத் தமிழினம் கண்களின் முன்னால் அழிந்து வருவதைக் காணச் சகியோம். எங்களிடம் அதிகாரம் இல்லை. ஆயுதங்கள் இல்லை. ஆட்சி இல்லை. வார்ததைகள் மட்டுமே உள்ளது. சிங்கள அரசின் தமிழ் ரத்தம் பருகும் இராணுவ வெறிமீது ஏவுகணைகள் போல் வார்த்தைகளை வீசுவோம். ஈழத்தமிழனத்தின் விடுதலைமீது, வாழ்வுமீது பாராமுகமாய் இருக்கும் தமிழக அரசியல் மௌனத்தின் மீது தற்கொலைபோல் வார்த்தைகளாய் விழுவோம். தேசம் என்று நம்பி வாழும் இந்தியப் பாராளுமன்றத்தின் மனசாட்சியை நோக்கி மரணம் போல வார்த்தைகளை நீட்டுவோம்".

ஒரு அமைப்புக்குள், வரம்புக்குள், நிபந்தனைக்குள் எத்தனை குரல் அடங்கி ஒலித்தது என்று எண்ணிக் கொண்டிருப்பவன் நோய்மையால் பீடிக்கபட்டவன். எத்தனை குரல்கள் அடங்க மறுத்தது, எத்தனை குரல்கள் மீறிப் பிதுங்கியது. அக்குரல்கள் அவ்வொட்டு மொத்தத்தின் மீது என்ன தாக்கம் புரிந்தது. அங்கு சமூகத்தின் மனசாட்சியாய், அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்யும்படி ஒரு குரலேனும் எழாதா என்று ஏங்கியிருப்பதும் அக்குரலை ஒட்டுமொத்தத்தின் பிரதிநிதித்துவமாய் மாற்றுவதும்தான் படைப்பாளியின், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவரின் நேர்மையாக இருக்க முடியும்.
படைப்பாளி பொதுவாக அதிகாரத்திற்கு எதிராக அரசுக்கு முன்னால் விழுந்து சமூகத்தின் மனசாட்சியாகத்தான் தன் குரலை ஒலிக்க வேண்டும். ஈழம் போன்ற பிரச்சினைகளில் அரசு தன் ஆதரவு நிலை எடுக்கும் போது படைப்பாளிகள் உற்சாகமடைந்து களத்தில் இறங்குவது இயல்பானதுதான். ஆனால் தமிழ் மாநிலத்தில் படைப்பாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகளுக்கும் அதிகாரத்திற்கும் உள்ள உறவு விமர்சனப்பூர்வமற்ற வகையில் சில நேரங்களில் அரசின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் போல் இலக்கிய பண்பாட்டுச் செயல்பாடுகள் அமைத்து விடுவது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாகும். இந்தக் கூட்டணியோடு சங்கமிக்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள் இலக்கிய உதிரிகள் மட்டுமே.

செயல்படுவது, மௌனம் காப்பது ஆகிய படைப்பாளியின் செயல்பாடுகள் அனைத்தும் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ அரசால் மட்டுமே வழிநடத்தப்படும் ஒன்றாக இருப்பது அவமானத்திற்குரியது. அச் சமூகத்திற்கு விடுதலை இல்லை. ஆனால் படைப்பாளியின் ஒட்டுமொத்த மன அமைப்பும் அரசின் சமிக்கைகளை ஒட்டியே இயங்கும் தன்மையுடையதாக அமைந்துவிட வாய்ப்பில்லை. மௌனம் காப்பது என்பது மௌனம் காப்பது மட்டுமல்ல. பொறுத்திருப்பது. வாய்ப்பு வரும் வரை இணங்கி இருப்பதுபோல் பாசாங்கு செய்வது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப்பின் ஈழத் தமிழர்கள் விடுதலை குறித்தோ விடுதலைப் புலிகளைப் பற்றியோ யாருமே பேசாமல் இருந்தார்கள் என்று சொல்லி விட முடியுமா? இன்றுபோல் ஒரு இயக்கமாக இல்லாவிட்டாலும் கூட படைப்பாளிகள், செயல்பாட்டாளர்கள் தங்களுக்குள்ளும் தங்கள் குழுக்களுக்குள்ளும் பேசியும் எழுதியும் தான் வந்திருக்கிறார்கள்.

மேலும் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட பிறகு கிளெஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி இப்போது பெரிய அளவில் இன அழிப்பு வேலைகளை சிங்கள அரசு செய்து வருகிறது. 1983க்குப் பிறகு சிங்கள அரசு வெறித்தனமாக மேற்கொண்டிருக்கும் இப்போருக்கான காரணத்தை இந்திய அரசு மேல் சுமத்தியிருக்கிறது. ஒரு படைப்பாளி என்ற அளவில் இல்லா விட்டாலும் கூட இந்தியாவை காரணம்காட்டி தமிழினத்தை அழிப்பதைக் கண்டிக்க ஒரு இந்திய குடிமகன் என்ற அளவில் போதுமான காரணங்களும் நியாயங்களும் இருக்கிறது.

மௌனம் காப்பது என்பது எவ்வாறு மௌனம் காப்பது மட்டும் இல்லையோ அது போலவே செயல்படுவது என்பது அரசோடு அப்படியே சேர்ந்து செயல்படுவது என்று அர்த்தமாகிவிடாது. தமிழக அரசும் கட்சிகளும் 'ஆதரிப்பு வேலைகளை' ஒரு அடையாளம் என்ற வகையில் மட்டுமே செய்து வருகிறது.

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பதவி விலகல் கடிதம் வாங்கியது, உண்ணாவிரதமிருந்தது, நிதி திரட்டி அனுப்பியது, பிரதமரிடம் போர் நிறுத்தம் வேண்டி மனுக் கொடுத்தது. இவையெல்லாம் ஒரு ஆதரவு நிலை என்ற செய்தியை சமூகத்திற்கு தெரிவிப்பது என்ற வகையில் மட்டுமே அமைந்துள்ளது.

டிசம்பர் 7ல் நடைபெற்ற கண்டனக் கவிதை போராட்டத்தின் கோரிக்கைகள் மூலமாகவும் அங்கு எழுப்பப்பட்ட கவிதைக் குரல்களின் வழியாகவும் நாம் எவ்வாறு அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்ய விரும்பினோம்.

தமிழக அரசு அதிகாரத்தை பங்குபோட்டுள்ள மத்திய அரசிற்கு "போதுமான நெருக்கடியைத்" தரவில்லை என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன? பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் இப்போரில் கொல்லப்படும் ஈழத்தமிழுயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழ் மாநிலம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் என்றெல்லாம் எச்சரிக்கத் தேவையில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மத்திய அமைச்சர்களிடமும் வாங்கிய பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்து (ஒரு வேளை ஒரு மாநில அரசு மத்திய அரசோடு பகிர்ந்திருக்கிற ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேறுவது என்ற செயல்பாட்டின் குறியீட்டு அர்த்தம் என்பது என்ன?) மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தால் மத்திய அரசின் செயல்பாடு எப்படி அமைந்திருக்கும்? ஒரு வேளை ஈழத்தில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையாவது குறைந்திருக்குமே.

ஒரு புறம் சிங்கள அரசிற்கு பொருளாதார இராணுவ உதவிகளைச் செய்து கொண்டே, வீடிழந்து, உடமைகள் இழந்து எங்காவது தப்பி உயிர் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் (தமிழகத்திற்குள்) அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை விரும்பத்தகாத குடியேற்றங்களாக மத்திய அரசு கருதுகிறது. பிரணாப் முகர்ஜி என்ற மத்திய அமைச்சர் தமிழகத்தில் வரும் போர் கைதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி தனது சொந்த பொறுப்பில் பராமரிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தினார். இதற்குக்கூட எதிர்வினை செய்யமுடியாது தனது இந்திய தேசிய ஒருமைப்பாட்டில் விறைத்து நிற்கிறது தமிழக அரசு.

மேலும் தமிழகத்திலுள்ள அகதி முகாம்கள் வாழும் தகுதியுடையதாக இல்லை. ஈழத்தமிழர்கள் மேல் உண்மையாகவே பற்று இருக்குமானால் இங்குள்ள அகதிகள் வாழ்க்கைக்குரிய உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நீண்டகால அடிப்படையில் தமிழக அரசு திட்டமிடவேண்டும்.

தன் வட எல்லையில் இராணுவத்தை நிறுத்தி "ஒருகைப் பிடி மண்ணை அந்நியன் அள்ளிக்கொண்டு போக விட மாட்டோம்" என்று சபதமிடும் இந்திய அரசிற்கு வடக்கே மட்டும் தான் எல்லையா? இந்திய இலங்கை கடல் எல்லையால் சந்தேகத்தின் பேரில் கொண்டு செல்லப்படும் மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? இந்திய கடல் எல்லையில் சிங்கள இராணுவத்தின் செயல்பாடுகளுக்கு இந்திய அரசு பொறுப்பேற்று செயல்படவேண்டும்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களை தமிழக ஊடகங்கள் திட்டமிட்டே தவிர்த்து வருகிறது. தமிழ் மக்களுக்கு செய்திகளை மறைப்பதில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் மக்களிடமிருந்து உருவாகும் நெருக்கடி தவிர்க்கப்படுகிறது. இன்று எல்லா தமிழக அரசியல் கட்சிகளிடமும் ஒலிபரப்பு வசதி இருந்தும் அங்கு மானும் மயிலும் ஆடுகிறது. ஒரு முறை கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்டபோது "ஐய்யோ கொல்றாங்க" என்று ஒரு வார காலம் தமிழ் மக்களின் மனங்களில் எவ்வளவு அதிர்வுகளை உருவாக்கியது. கிளிநொச்சியில் 52000-ற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துபோயுள்ளன. மழைவெள்ளத்தில் 15000 வீடுகள் அழிந்து போயுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் காடுகளில் வாழ்கிறார்கள். சர்வதேச நாடுகளால் தடைசெய்யப்பட்ட கிளெஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. " ஐய்யய்யோ தமிழினத்தையே அழிக்கிறாங்க அழிக்கிறாங்கன்னு" நமது ஊடகங்களில் எதுவுமே ஒலிபரப்பப்படுவதில்லையே அது ஏன்?.

இந்தியாவில் இந்துக்களைக் காப்போம் இராம இராஜ்யத்தை உருவாக்குவோம் என்று அரசியல் செய்து வரும் இந்துத்வா சக்திகளுக்கு இலங்கையில் கொல்லப்படுபவர்கள் இந்துக்கள் என்று இன்றுவரை தெரியாமல் போனதா? புத்த பிச்சுகளும் இராணுவ சேவையில் ஈடுபடும் அளவிற்கு பௌத்த மத வெறியும் இதில் கலந்திருக்கிறது என்று இவர்களுக்கு தெரியாதா? இதுவரை மதவெறியால் கொல்லப்படும் இந்துக்களுக்கு மத அடிப்படையிலாவது ஆதரவாக ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை.

இவ்வாறாக இயன்றவரை இந்தியாவிலுள்ள அனைத்து அதிகாரங்களை நோக்கியும் குற்றம் சுமத்தி விமர்சித்து இந்தப் போராட்டத்தில் கடுமையாக குரல் எழுப்பியிருக்கிறோம்.

ஈழத்தமிழர் பிரச்சனைக்கான இறுதித் தீர்வு என்னவாக இருக்கப் போகிறது என்று நம்மால் அனுமானிக்க இயலவில்லை. நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளைத் தடுக்க, தலையிட வேண்டி நம் சார்ந்த அரசாங்கங்களிடம் போராட வேண்டியிருக்கிறது.

கிளெஸ்டர் குண்டுகள்போல் சர்வதேச நாடுகள் பலவற்றால் தடைசெய்யப்பட்ட அழிவுப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருக்க, ஈழத்திலிருந்து வாழ விரும்பும் அப்பாவி தமிழ்மக்களைக் கொல்லாதிருக்க, அவர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான வாழ்வாதாரங்கள், வேலை வாய்ப்புகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ள, தமிழர்களின் உயிர்வாழ்ந்துகொள்ளும் உரிமையின் மீது மீறல்கள் ஏற்படாதிருக்க, நாம் ஒரு சர்வதேச பார்வையாளர்கள் குழு ஒன்றை நிரந்தரமாக கோருகிறோம். அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருத்தல் நலம். ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பால் இக்குழு ஏற்படுத்தப்பட்டு இலங்கை நிலவரங்கள் குறித்து அவை அளிக்கும் அறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவற்றை இலங்கை அரசு ஏற்று நடக்கும்படியான ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். தமிழக அரசும் இந்திய அரசும் இதை நோக்கிய சர்வதேச கவனத்தை கோரவேண்டும்.

டிசம்பர் 7 - இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான கண்டனக் கவிதைப் போராட்டம் இன்னொரு வகையிலும் சிறப்புக்குரியதே. பெண்களால் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுகிருக்கிறது. "நவீன தமிழ் கவிஞர்களின் சுவாதீனமான முதல் கவிதை இயக்கம்" என்று இதைக் குறிப்பிடுவதை பலரும் விரும்பாமல் கூட இருக்கலாம். அப்படிச் சொல்லிப் பார்ப்பது தனிப்பட்ட விருப்பமாக மட்டுமே எஞ்சி நிற்கலாம்.

ஆனால் இந்நிகழ்வுக்கு நூற்றிற்கும் மேற்பட்ட கவிஞர்கள் தன்னிச்சையாக திரண்டு கூடியது நல்ல அறிகுறி. இந்த ஒன்றிணைவை பாதுகாத்து இந்தப் போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து செயல்படுவது, பிற சமூக கலாச்சார நடவடிக்கைகளிலும் இயக்கமாய் இடையீட்டை செய்வது அரசு அதிகார மையங்களை அண்டியே வாழாமல் விமர்சனங்களை முன் வைப்பது, அதிகாரங்களுக்கு எதிராக இயக்கமாகி குரல் கொடுப்பது போன்ற முயற்சிகளுக்கு இந்த கண்டனக் கவிதைப் போராட்டம் ஒரு நல்ல ஆரம்பம்.