November 30, 2008

எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல் - செல்மா பிரியதர்ஸன்

எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல்.

இது இறுதிப் போர் என்று அறிவித்து சிங்கள ராஜபக்சே அரசு ஏவுகணைகளையும் எறிகுண்டுகளையும் ஈழத் தமிழர்களின் குடியிருப்பின் மேல் உடமைகள் மேல் வாழ்வாதாரங்களின் மேல் எறிந்து வருகிறது. இலங்கையின வரைபடத்திலிருந்து தமிழர்களை துடைத்து எறியும் இறுதி நடவடிக்கையாக சிங்கள அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. உயிர் பிழைத்திருக்க முப்பது ஆண்டுகளாக அத்தீவைவிட்டு வெளியேறி உலகம் முழுவதும் அகதிகளாக வாழ்ந்து வருகிறது ஈழத் தமிழனம.; கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் குடியிருப்புகளைவிட்டு வெளியேறி வனாத்திரங்களில் முகாம்கள் அமைத்து பசியிலும் நோயிலும் பிழைத்து வருகிறார்கள். உணவுப் பொட்டலங்களுக்குப் பதிலாக அணுகுண்டுகளை விட மோசமான உயிர்க்காற்றை ( ஆக்ஸிஜனை) உறிஞ்சுகிற உக்கிர குண்டுகளை அவர்களுக்கு உணவாக வழங்குகிறது ராஜ பக்சே அரசு. எப்போதும் போல் தமிழ்ப் பெண்களின் உடல்கள் மேலும் நீட்டிக்கப்படும் போரின் செயல்பாடுகள். சிங்கள அரசிற்கு பொருளாதார இராணுவ உதவிகளைச் செய்துவரும் நம் இந்திய அரசோ இந்தியாவிற்கு (தமிழகத்திற்குள்) வரும் போர் அகதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி தனது சொந்தப் பொறுப்பில் பராமரிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துகிறது.

மத்திய அரசில் அதிகாரத்தினை பங்கு போட்டிருக்கும் தமிழ் மாநில அரசியல் கட்சிகளோ அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மீது விறைத்த பற்றுடன் செயலாற்றி வருகிறது.

தமிழ் மொழியில் கவிதைகள் எழுதிவரும் நாங்கள் நிலவிவரும் சூழல்களையும் நிலவரங்களையும் அறிந்திருக்கிறோம். ஒரு சமூகத்தில் மொழியில் இயங்கும் கவிஞர் என்பவரின் வரம்புகளையும் சாத்தியங்களையும் உணர்ந்தே இருக்கிறோம். அழிந்து வரும் அரிய உயிரினத்தின் மாதிரிகள் போல நாம் வாழும் காலத்தில் ஈழத் தமிழினம் கண்களின் முன்னால் அழிந்து வருவதைக் காணச் சகியோம் எங்களிடம் அதிகாரம் இல்லை ஆயுதங்கள் இல்லை ஆட்சி இல்லை. வார்த்தைகள் மட்டுமே உள்ளது சிங்கள அரசின் தமிழ் ரத்தம் பருகும் இராணுவ வெறிமீது ஏவுகணைகள் போல் வார்த்தைகளை வீசுவோம். தமிழனத்தின் விடுதலைமீது வாழ்வுமீது பாரா முகமாய் இருக்கும் தமிழக அரசியல் மௌனத்தின் மீது தற்கொலைபோல் வார்த்தைகளாய் விழுவோம். தேசம் என்று நம்பி வாழும் இந்தியப் பாராளுமன்றத்தின் மனசாட்சியை நோக்கி மரணம் போல வார்த்தைகளை எறிவோம், கண்ணீர் சிந்துவோம், ஒப்பாரி வைப்போம், தூற்றுவோம் சாபமிடுவோம்.

தமிழகத்தில் கவிஞர்கள் பல்வேறு குழுக்களாக, வேறுபாடுகள் உடையவர்களாக இருந்து வந்த போதிலும் எல்லா வித்தியாசங்களையும் கடந்து சென்னை மெரினா கடற்கரையில் டிசம்பர் 7-ல் ஒன்று சேர்கிறோம். தமிழகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் சொந்த தார்மீகத்தில் கடற்கரை நோக்கிப் பயணிக்கிறோம்.

தமிழ்க் கவிஞர்களின் கண்டனக் கவிதைப் போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள அனைத்து எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், மாணவர்களையும், பொதுமக்களையும் அழைக்கிறோம்.

செல்மா பிரியதர்ஸன்

1 comment:

Perundevi said...

சென்னையில் இல்லாததால் பங்கேற்க முடியவில்லை. கவிஞர்களின் போராட்டமும் கோரிக்கைகளும் கவனிக்கப்படவும் முன்னெடுத்துச் செல்லப்படவும் என் வாழ்த்துகள், செல்மா.