ஈழ தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரி தமிழ் கவிஞர்களின் கண்டனம் - சில சொற்களோடு
ஒவ்வொரு இனத்திற்கும், அதன் உள்புறத்தில் இயங்கும் இனக்குழுக்களுக்கும், நீண்ட மரபுடனும் சடங்குகளுடனும் வழிபாடுகளுடனும் கூடிய அகவுடல் ரசசியங்களால் அமைந்திருப்பது. உரிமைகளை, எதிப்பை, பாதுகாப்பை, உறவை அவை உரிய வழிகளில் ரகசியங்களை பேணிய வண்ணம் எதிர்கொள்ள இயலாமல் போகும் போது வெடிப்புறத் தொடங்குகிறது.
மானுடவியல், இனவரையியல் போன்ற அறிவுக் கருவிகள், ஊடகத் தகவல்கள் ஆகியவை இனங்களை, சமூகங்களை, குழுக்களை அறிய உதவுவது போன்ற பாவனைகள் மட்டுமே, அறிவுக் கருவிகள் மூலம் சமூகத்தின் ஒரு பண்பை அறிய முயலும்போது அறிய இயலாத பகுதிகளை, ஊடக வழிகள் கொண்டும் பொதுப் புத்தி சார்ந்தும் இட்டு நிரப்பும் முயற்சி முடிவில் அடிப்படை உள்ளுணர்வின் எதிர்ப்புணச்சிக்கு இலக்காவது தவிர்க்க இயலாதது.
பொதுப் புத்தி என்பது மக்களின் பார்வை என்பதல்ல. மாறாக அது முன்னேற்றம், வளர்ச்சி, வெற்றி, பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பதங்களின் ஊடாக வறண்ட கற்பனையை களியூட்டுகிற அரசின் செயல் ஆகும், மனித உயர் உணர்வின் உயர்ந்த பட்ச சாத்தியங்களை, தன்னிச்சையான கற்பனையின் விகாரத்தை இது தடை செய்யும் செயலும் ஆகும். இச் செயல்பாட்டின் ஒரு பகுதியான பொதுப்புத்தி என்பது படைப்புச் செயல்பாட்டுக்கு நேர் எதிர் திசையில் கதி நிலை பெற்றிருந்தலின் அபாயத்தை பல திசைகளில் எதிர் கொள்ளும் திசையில் இன்றைய மனித இருப்பின் ஆதாரம் குழப்பமடைந்திருக்கிறது. உயர் மனசாட்சியின் எதிர்ப்பாக ரகசியங்களின் அறச்செயல்பாடாக துப்பாக்கிச் சத்தத்தை பெருகச் செய்தது. எதிர்ப்பிற்கு மௌனத்தையும் அலட்சியத்தையும் முகம் காட்டும், தனிமனித பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாகக் கூறும் உலக முழுதும் விரிந்துள்ள ஒற்றைபடை நாகரீக ஜனநாயக அரசு ஆகும்.
தனி மனிதப் பாதுகாப்பை முன்னிறுத்தி, சமூகங்களை அலட்சியம் செய்யும் இவ்வரசு எதையும் பாதுகாக்க இயலாத நிலைக்கு பின் தள்ளப்பட்டு விட்டது.
இந்நிலையில் இவ்வரசுக்கு அப்பாற்பட்டு, பொதுப்புத்தி, அரசியல், ஊடகம், ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டு கவிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோர்களின் தற்கால சமூகப் பொறுப்புகள் என்னென்னவாக அமைய வேண்டும். இவை நமது பொது சுயத்தின் விசாரனைக்கு உட்பட்டவை, இவ்விசாரணையே வருங்காலங்களில் ஜனநாயக அரசுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே நிகழவிருக்கும், மோதல்களின் போது சகல விதமான வாழ்தலின் சுதந்திரத்தை மீட்கவும் வலியுறுத்தவும் நமக்கு உதவும்.
இந்த அடிப்படையிலேயே ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் போருக்குத் தமிழ் கவிஞர்கள் தங்கள் உணர்வின் பொது வெளிப்பாடாக கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
மாறுபட்ட வாழ்க்கைப் பின்புலனும் வரலாறும் கொண்ட ஈழத் தமிழர்களின் படைப்புகள் சுயதன்மையும் சுய வரலாறும் கொண்டவை. தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் ஈழத் தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் தனித்து அறியப் படவேண்டியவை. தமிழினம் என்று ஒற்றை இனப் பார்வையை முன்னிறுத்தும் ஊடகமறதி அரசியல் குரல்களிலிருந்து படைப்புக் குரல்கள் மாறுபட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகில் எந்தவொரு இனமும் எந்தவொரு காரணத்தின் பெயராலும் ராணுவத்தின் தலைமையோடு ஒழிக்கப்படுவதை தமிழ் கவிஞர்கள் எதிர்க்கிறோம். அவ்வகையில் ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவப் போரை தமிழ் கவிஞர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்க் கவிஞர்கள் இக்கண்டனத்தைத் தெரிவிக்கும் இச் சந்தர்ப்பத்தில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவிக்கும் கோரிக்கைகள் இவை.
1. உலக அளவில் ஈழத் தமிழ் அகதிகள் – தமிழகத்தில்தான் வேறெங்கு நடப்பதைக் காட்டிலும் மலிவான முறையில் நடத்தப்படுகிறார்கள். அவமானத்திற்குள்ளாகிறார்கள் மனிதவுரிமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் கண்காணிப்பிற்கிலக்காகிறார்கள். அகதிகள் முகாம்கள் சிறைக் கூடங்களுக்கு ஒப்ப அமைந்துள்ளன. சமூக அவமானங்களும் சமூக அநீதிகளுக்கும் ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் இலக்காகிறார்கள். மனிதவுரிமைகளின் அடிப்படையில் இவற்றை களைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2. ஈழத் தமிழ் படைப்பாளிகளின் நூற் பதிப்புகளுக்கு தமிழகம் முக்கியத்துவமளிக்க வேண்டும். ஈழத் தமிழ் படைப்புகளும், வரலாறும் மாணவர்களின் பாடத் திட்டங்களில் இடம் பெறவேண்டும். செம்மொழி திட்டங்களில் ஆய்வுகளில் ஈழத் தமிழுக்கு உரிய இடம் தரப்பட வேண்டும்.
3. ஈழத்தில் வட இந்திய பன்னாட்டுமுதலாளிகள், முதலாளிகள் நில ஆக்ரமிப்பு செய்வதையும், இந்திய அரசு அதற்கு ஊக்கமாகத் திகழ்வதையும் தமிழக அரசு கண்டித்து ஈழ தமிழ் நில ஆக்ரமிப்புகளை தடுக்க வகை செய்ய வேண்டும். அம்மக்களுடனான நேர்மையான உறவு வலுப்பட இது உதவும்.
4. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர் தாக்குதலுக்கு இலக்காவது இந்திய அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான செயலின்மையை காட்டுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.
5. இலங்கை ராணுவத்திற்கான ராணுவ ஒத்துழைப்பை இந்திய அரசு கைவிடுவதோடு ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் போரை நிபந்தனைகளற்று உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து பின்னர் பேச்சுவார்த்தையைத் துவங்கவேண்டும்.
December 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment