தமிழ் என்ற மொழியைப் பேசுவதற்காகவே ஒரு இனம் ஈழத்தில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. விழுகின்ற விமானக்குண்டுகளும், ஏவப்படுகின்ற எறிகணைகளும், கைது செய்யப்பட்டு நிகழ்த்தபடுகின்ற சித்திரவதைகளும், காணாமற்போதல்களும் 'தமிழன்/தமிழச்சி' என்ற ஒரே அடையாளத்தோடு இருப்பதால் மட்டுமே ஈழத்தமிழர்களைத் தேடித்தேடி, ஆதிக்கச்சக்தி தனது இராட்சதக் கரங்களை படரவிட்டுக் கொண்டிருக்கின்றன. கவிஞர்கள்/படைப்பாளிகள் தாம் வாழும் சமுகத்திலிருந்து மிக அந்நியப்பட்டவர்கள் என்ற பொதுப்புத்தியை விலத்தி ஈழத்திலிருக்கும் தமிழர்களுக்காய் சக மானுடர்களாய் கண்ணீர் சிந்தவும், 'நீங்கள் தனித்தவர்கள் அல்ல நாமிருக்கின்றோம்' என்ற நம்பிக்கையை மிக உறுதியாய்க் கொடுககவும் முன்வந்திருக்கும் கவிஞர்களாகிய உங்களை நன்றியுடன் நினைவிலிருந்திக்கொள்கின்றேன்.
ஈழத்தமிழர்கள் வேண்டிநிற்பது, தாம் பூர்வீகம் பூர்விகமாய் வாழ்ந்த நிலப்பரப்பில் எவரது கண்காணிப்போ/கட்டுப்பாடோ இன்றி கைவீசிச் சுதந்திரமாய் நடப்பதை. எமது மண்ணில் எமது மக்கள் தமது விருப்புக்களோடு வாழ்வதை ஏற்றுக்கொள்ளாத எந்த அரசும் எமது மக்களுக்கு உரித்தான அரசல்ல. ஈழத்திலிருக்கும் மக்கள் தம் சுயவிரும்பில் தமது தெரிவுகளையெடுத்து தாம் விரும்புவதைச் செயற்படுத்த ஒரு நீதியான, சமத்துவமான தீர்வு முன்வைக்கப்படவேண்டும். அதுவே எம் மக்களுக்கான சுபீட்சமான வாழ்வைக் கொடுப்பதற்கான ஒரு முன் நிபந்தனையாக அமையும். இவையெல்லாவற்றையும் விட உடனடி யுத்தநிறுத்தம் செய்யப்படுவது, எல்லாவித அழிவுகளிலிருந்தும் தப்புவதற்கு ஈழத்தமிழர்களுக்கு அவசியமாகின்றது. மக்களைப் பாரிய படுகொலை செய்து வெற்றியைக் கொண்டாடி ஆட்சிப்பீடத்திலேறும் அரசுகள் அரசுகளேயல்ல, பேய்களே ஆகும்.
இளங்கோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment