December 5, 2008

அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு ஆதரவு மடல்

அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு ஆதரவு மடல்
ஒரு காலத்தில் 'மாமொத்' என்ற பாரிய உடல் கொண்ட பனியானை இந்தப் பூமியில்
வாழ்ந்தது. 4500 வருடங்களுக்கு முன்னர் அந்த யானை இனம் அழிந்துபோனது.
நான் வாழும் கனடா நாட்டில் ஒரு காலத்தில் Dawson Caribou என்ற மான் இனம்
பல்கிப் பெருகி வாழ்ந்தது. ஆனால் 1984ம் ஆண்டுக்கு பிறகு அந்த மான்
இனத்தை ஒருவரும் காணவில்லை. முற்றிலுமாக அழிந்துவிட்டது.
2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் நியூயோர்க்கில் இருக்கும் The
American Museum of Natural Hiostory அருங்காட்சியகத்துக்கு
போயிருந்தேன். அங்கே பாடம் செய்யப்பட்ட புறாவகை ஒன்றை விஞ்ஞானி
காட்டினார். அதன் பெயர் passenger pigeon. கொலம்பஸ் அமெரிக்காவை
கண்டுபிடித்த சமயத்தில் அங்கே 300 கோடி புறாக்கள் ( passenger pigeons)
இருந்தனவாம். இப்பொழுது ஒன்றுகூட இல்லை. கடைசிப் பறவை 1914ல்
இறந்துவிட்டது. அதைத்தான் பாடம் செய்து வைத்திருந்தார்கள்.
இந்தப் பூமியில் ஆதியிலிருந்து உயிர்கள் தோன்றுவதும், பரிணாமத்தில்
வளர்ச்சியடைவதும் பின்னர் அழிவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இப்பொழுது அதே மாதிரி இலங்கையில் ஓர் அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்து நடக்கும் தமிழ் இன அழிப்பு இப்பொழுது
உச்சக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. உலகத்திலே எங்கேயாவது ஓர் அரசு தன்
மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி அழித்திருக்கிறதா? அது இலங்கையில்
தினம் நடந்துகொண்டிருக்கிறது. எம் கண்முன்னே தமிழ் இனம் மெல்ல மெல்லச்
சாகிறது.
இந்தச் சமயத்தில் போரில் சிக்கி அழிவை நோக்கி செல்லும் ஈழத் தமிழினத்தின்
விடிவை வேண்டி தமிழகத்தின் அன்பு உள்ளங்கள், கவிஞர்கள் டிசம்பர் ஏழாம்
தேதி மெரினாவில் கண்டனக் கவியரங்கம் நடத்துவதாக அறிகிறேன். இது என்னுடைய
நெஞ்சை மாத்திரமல்ல உலகெங்கும் பரந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சங்களின்
மனதையும் நெகிழ்வடைய வைத்திருக்கிறது.
கவிஞர்களின் கண்டனக் கூட்டம் சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காகவும்,
ஈழத் தமிழர்களின் விடிவு நிசமாகவேண்டும் என்பதற்காகவும் என்
பிரார்த்தனையை செலுத்துகிறேன்.

அன்புடன்
அ.முத்துலிங்கம்

No comments: