அன்பார்ந்த கவிஞர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கு
இன்று சென்னையின் பெயர்பெற்ற மெரினா கடற்கரையில் காந்தியார் சிலை அருகே இந்தக் கவிதை அரங்கு நடக்கிற இந்தத்தருணத்தில், உங்கள் அனுமதியுடன், இந்த ஒருசில கணங்களை எடுத்துக்கொள்கிறேன்.
இந்தக் கவிதை-அரங்கை ஒப்பாரி என்று நீங்கள் அழைத்தது, இந்தக் கடலும் கடற்கரையும் ஏராளமான வன்முறையைச் சாட்சியாகக் கண்டவை, கண்டுகொண்டிருப்பவை என்பதை உணர்ந்தே என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டின் மீனவர்களும் இலங்கையின் தமிழ்மக்களும் ஏன் பிற மக்களும் கண்ட ரத்தம், இந்தக் கடலின் உப்புநீரில் சுவையில் கலந்த ஒன்றுதான்.
இவர்களையும் நம்மையும் பிரிக்கும் கடற்பரப்பு இருபதே மைல் தான் - அந்தப்பரப்பில் இருப்பவர்களும் நம்முடைய மீனவ சமுதாயத்தினர்தான். ஆனால் நம்முடைய வாழ்வுக்கும் இவர்களுடைய மரணத்துக்கும் உள்ள தூரம்தான் எத்த்னை! அது இன்னமும் பெருகிகொண்டே போகிறது. அதைக் குறைக்க முடியாத சோகத்தில்தான் நாம் அனைவரும் இன்று ஒன்றாக இணைகிறோம்.
அதேவேளை, ஐயாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து உங்களுடன், இலங்கையில் சமாதானம் வேண்டும் என்ற உங்கள் ஆதங்கத்தை என்னால் உணர முடிகிறது. உங்களில் ஒருவனாக நானும் இங்கில்லையே என்ற ஏக்கமும் என்னிடம் இருக்கிறது.
ஈழத்தமிழர்களின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும் நம்முடைய இந்த உணர்வு, இன்று தமிழ்நாடெங்கும், தென்னகமெங்கும், இந்தியாவெங்கும் எதிரொலிக்க வேண்டும். கால் நூற்றாண்டாக இலங்கையில் நடந்துவரும் போர் ஓய வேண்டும், அங்குள்ள் ஈழத்தமிழ்மக்களின் இன்னல்களும் துயரங்களும் ஓய வேண்டும், இலங்கை அதிபரிடம் இந்திய அரசும் பன்னாட்டு அரசுகளும் வற்புறுத்தி அதைச் சாதிக்க வேண்டும், விடுதலைப்புலிகள் சமாதானத்தை ஏற்றுப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும், தமிழ்மக்கள் தங்கள் நியாயமான சமத்துவ உரிமைகளைப் பெற்று தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்ற ஆதங்கம் எங்கும் பரவியிருக்கிறது.
ஆனால் இலங்கையிலிருந்து தற்போது வந்துகொண்டிருக்கும் செய்திகள், வெற்றிச்செய்திகள் அல்ல. மாறாக, பெரும் கவலை தரும் செய்திகள். ஒருபுறம் உக்கிரமான போர், அதில் முன்னேறிவரும் அரச படைகளுக்கு முகம் கொடுத்துப் போரிட வேண்டிய நிலையில் விடுதலைப்புலிகள். மறுபுறம், அரச படைகளின் தாக்குதலை அடுத்து, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து துரத்தப்பட்டு அனைத்தையும் தொலைத்து வன்னிப்பகுதியில் நிர்க்கதியாக நிற்கும் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள். இவர்களுக்கு உதவ இன்று யார்தாம் இருக்கிறார்கள்?
சுமார் மூன்று லட்சம் மக்கள், வன்னியில் பரந்தன் மற்றும் புதுக்குடியிருப்புக்கு இடைப்பட்ட பகுதியில் 20 மைலுக்குப் பத்து மைல் என்ற பரப்பில் இருக்கிறார்கள். தினம் நான்கைந்து மணி நேரம் மழை பெய்கிற சூழ்நிலை. உணவு, எரிபொருள், மருந்துகள் எல்லாமே பற்றாக்குறை. நிச்சயமற்ற போர்ச்சூழல். நிச்சயமற்ற எதிர்காலம்.
இந்த நிலையில், போர்-நிறுத்தம் மிகமிக அவசியம். உலகில் இவர்கள் தனியாக இல்லை. இவர்களுடன் நாமும் இருக்கிறோம் என்பதை நிரூபித்தாக வேண்டிய நிலை நமக்கு. நமக்கு நன்றாகத் தெரிகிறது - நிவாரணப்பணி நடப்பதற்கே போர்-நிறுத்தம் மிகமிக அவசியம் என்ற நிலை. இல்லாவிட்டால் இந்த மக்கள் அழிவில் விளிம்பில் செல்வார்கள். இன்று யாரும் மிகமிக அடிப்படையாகச் செய்யவேண்டியது, இந்தத் தமிழ்மக்களைக் காப்பாற்றும் பணியையே.
இந்தப்பணியின் ஒருகட்டமாக எழுத்தாளர்களாகிய நாம் இங்கே ஒன்றுகூடியிருக்கிறோம். நமக்கென்று இருக்கும் இந்த வரலாற்றுப்பணியை நிறைவேற்ற இருக்கிறோம்.... கலைஞர்களாகிய, எழுத்தாளர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குள் உரையாடல், விவாதம், சர்ச்சை எல்லாவற்றிலும் ஈடுபடத்தான் செய்வோம். ஆனால், அதையெல்லாம் தாண்டி இப்படி இணைந்திருக்கிறோம் என்பது, நமக்கெல்லாம் பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயம். இவ்வகையில், நம் மக்களுடைய சோகங்கள் மற்றும் அபிலாஷைகள் அனைத்திலும் நாமும் இரண்டறக் கலந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.. நம் பணி இன்னமும் முடியவில்லை என்பதையும் நினைவில் கொள்வோம்.
இறுதியாக ஓர் அதிமுக்கிய விஷயம் - தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நெடிய கவிதை-வரலாறு உண்டு. ஆனால் இன்று இந்த வன்முறையின் சோகத்துக்கு முன்னே நம்முடைய தமிழ்மொழி ஒடுங்கி நிற்கிறது. நம்முடைய மொழிக்கு முன்பிருந்த அன்பின் வலிமை, அருளின் பெருமை, இன்றும் தொடர்கிறதா என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம்முடைய படைப்புமொழிக்கான எதிர்காலம் பற்றிய கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
உங்கள்
நாகார்ஜுனன்
நினைவோ அதனில் எத்தனை ரத்தம்!
என்
நினைவோ அதனில் அத்தனை ரத்தம்
என்
நினைவோ அதனில் வாவிகள் தங்கும்.
அல்லி மலர்களா அவற்றை மூடும்?
அல்ல.
சாவின் தலைகளே அவற்றை மூடும்.
என்
நினைவோ அதனில் வாவிகள் தங்கும்.
அவற்றின் கரைகளில் காய்வதும் அல்ல
பெண்கள் போடும் கீழ்த்துணி ஏதும்.
என்
நினைவைச் சுற்றும் அத்தனை ரத்தம்.
என்
நினைவின் இடைவாரில் அத்தனை பிணமும்!
பீப்பாய் ரம்மின் எந்திரத் தோட்டா
பீறிடும் ஒளியில் தெளிவாய்த் தூண்டும்
அவச்சொல் பெற்ற கலகம் பலதின்
கொடிய விடுதலை அதீதம் பருகும்
மோகம் கொண்ட பார்வை தன்னில்
என்
நினைவாய்ச் சுற்றும் அத்தனை ரத்தம்!
ஃப்ரெஞ்சுக் காலனியாதிக்கத்தை எதிர்த்துக் கவிதையும் அரசியலும் படைத்த மர்த்தினிக் என்ற பசிஃபிக் தீவின் முன்னாள் மேயர் எமே செஸேர். எமே செஸேர், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மறைந்தார். இவருடைய பெயர்பெற்ற் புத்தகம், தாயகம் திரும்புவதற்கான கையேடு (Le Cahier d'un Retour du pays natal, 1939). இதிலிருந்து நான் தமிழாக்கம் செய்த வரிகள் இவை - நாகார்ஜுனன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment