December 8, 2008

அன்பார்ந்த கவிஞர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கு-நாகார்ஜுனன்.

அன்பார்ந்த கவிஞர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கு

இன்று சென்னையின் பெயர்பெற்ற மெரினா கடற்கரையில் காந்தியார் சிலை அருகே இந்தக் கவிதை அரங்கு நடக்கிற இந்தத்தருணத்தில், உங்கள் அனுமதியுடன், இந்த ஒருசில கணங்களை எடுத்துக்கொள்கிறேன்.

இந்தக் கவிதை-அரங்கை ஒப்பாரி என்று நீங்கள் அழைத்தது, இந்தக் கடலும் கடற்கரையும் ஏராளமான வன்முறையைச் சாட்சியாகக் கண்டவை, கண்டுகொண்டிருப்பவை என்பதை உணர்ந்தே என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டின் மீனவர்களும் இலங்கையின் தமிழ்மக்களும் ஏன் பிற மக்களும் கண்ட ரத்தம், இந்தக் கடலின் உப்புநீரில் சுவையில் கலந்த ஒன்றுதான்.

இவர்களையும் நம்மையும் பிரிக்கும் கடற்பரப்பு இருபதே மைல் தான் - அந்தப்பரப்பில் இருப்பவர்களும் நம்முடைய மீனவ சமுதாயத்தினர்தான். ஆனால் நம்முடைய வாழ்வுக்கும் இவர்களுடைய மரணத்துக்கும் உள்ள தூரம்தான் எத்த்னை! அது இன்னமும் பெருகிகொண்டே போகிறது. அதைக் குறைக்க முடியாத சோகத்தில்தான் நாம் அனைவரும் இன்று ஒன்றாக இணைகிறோம்.

அதேவேளை, ஐயாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து உங்களுடன், இலங்கையில் சமாதானம் வேண்டும் என்ற உங்கள் ஆதங்கத்தை என்னால் உணர முடிகிறது. உங்களில் ஒருவனாக நானும் இங்கில்லையே என்ற ஏக்கமும் என்னிடம் இருக்கிறது.

ஈழத்தமிழர்களின் சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும் நம்முடைய இந்த உணர்வு, இன்று தமிழ்நாடெங்கும், தென்னகமெங்கும், இந்தியாவெங்கும் எதிரொலிக்க வேண்டும். கால் நூற்றாண்டாக இலங்கையில் நடந்துவரும் போர் ஓய வேண்டும், அங்குள்ள் ஈழத்தமிழ்மக்களின் இன்னல்களும் துயரங்களும் ஓய வேண்டும், இலங்கை அதிபரிடம் இந்திய அரசும் பன்னாட்டு அரசுகளும் வற்புறுத்தி அதைச் சாதிக்க வேண்டும், விடுதலைப்புலிகள் சமாதானத்தை ஏற்றுப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும், தமிழ்மக்கள் தங்கள் நியாயமான சமத்துவ உரிமைகளைப் பெற்று தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்ற ஆதங்கம் எங்கும் பரவியிருக்கிறது.

ஆனால் இலங்கையிலிருந்து தற்போது வந்துகொண்டிருக்கும் செய்திகள், வெற்றிச்செய்திகள் அல்ல. மாறாக, பெரும் கவலை தரும் செய்திகள். ஒருபுறம் உக்கிரமான போர், அதில் முன்னேறிவரும் அரச படைகளுக்கு முகம் கொடுத்துப் போரிட வேண்டிய நிலையில் விடுதலைப்புலிகள். மறுபுறம், அரச படைகளின் தாக்குதலை அடுத்து, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து துரத்தப்பட்டு அனைத்தையும் தொலைத்து வன்னிப்பகுதியில் நிர்க்கதியாக நிற்கும் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள். இவர்களுக்கு உதவ இன்று யார்தாம் இருக்கிறார்கள்?

சுமார் மூன்று லட்சம் மக்கள், வன்னியில் பரந்தன் மற்றும் புதுக்குடியிருப்புக்கு இடைப்பட்ட பகுதியில் 20 மைலுக்குப் பத்து மைல் என்ற பரப்பில் இருக்கிறார்கள். தினம் நான்கைந்து மணி நேரம் மழை பெய்கிற சூழ்நிலை. உணவு, எரிபொருள், மருந்துகள் எல்லாமே பற்றாக்குறை. நிச்சயமற்ற போர்ச்சூழல். நிச்சயமற்ற எதிர்காலம்.

இந்த நிலையில், போர்-நிறுத்தம் மிகமிக அவசியம். உலகில் இவர்கள் தனியாக இல்லை. இவர்களுடன் நாமும் இருக்கிறோம் என்பதை நிரூபித்தாக வேண்டிய நிலை நமக்கு. நமக்கு நன்றாகத் தெரிகிறது - நிவாரணப்பணி நடப்பதற்கே போர்-நிறுத்தம் மிகமிக அவசியம் என்ற நிலை. இல்லாவிட்டால் இந்த மக்கள் அழிவில் விளிம்பில் செல்வார்கள். இன்று யாரும் மிகமிக அடிப்படையாகச் செய்யவேண்டியது, இந்தத் தமிழ்மக்களைக் காப்பாற்றும் பணியையே.

இந்தப்பணியின் ஒருகட்டமாக எழுத்தாளர்களாகிய நாம் இங்கே ஒன்றுகூடியிருக்கிறோம். நமக்கென்று இருக்கும் இந்த வரலாற்றுப்பணியை நிறைவேற்ற இருக்கிறோம்.... கலைஞர்களாகிய, எழுத்தாளர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குள் உரையாடல், விவாதம், சர்ச்சை எல்லாவற்றிலும் ஈடுபடத்தான் செய்வோம். ஆனால், அதையெல்லாம் தாண்டி இப்படி இணைந்திருக்கிறோம் என்பது, நமக்கெல்லாம் பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயம். இவ்வகையில், நம் மக்களுடைய சோகங்கள் மற்றும் அபிலாஷைகள் அனைத்திலும் நாமும் இரண்டறக் கலந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.. நம் பணி இன்னமும் முடியவில்லை என்பதையும் நினைவில் கொள்வோம்.

இறுதியாக ஓர் அதிமுக்கிய விஷயம் - தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நெடிய கவிதை-வரலாறு உண்டு. ஆனால் இன்று இந்த வன்முறையின் சோகத்துக்கு முன்னே நம்முடைய தமிழ்மொழி ஒடுங்கி நிற்கிறது. நம்முடைய மொழிக்கு முன்பிருந்த அன்பின் வலிமை, அருளின் பெருமை, இன்றும் தொடர்கிறதா என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம்முடைய படைப்புமொழிக்கான எதிர்காலம் பற்றிய கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

உங்கள்
நாகார்ஜுனன்

நினைவோ அதனில் எத்தனை ரத்தம்!

என்
நினைவோ அதனில் அத்தனை ரத்தம்
என்
நினைவோ அதனில் வாவிகள் தங்கும்.
அல்லி மலர்களா அவற்றை மூடும்?
அல்ல.
சாவின் தலைகளே அவற்றை மூடும்.
என்
நினைவோ அதனில் வாவிகள் தங்கும்.
அவற்றின் கரைகளில் காய்வதும் அல்ல
பெண்கள் போடும் கீழ்த்துணி ஏதும்.
என்
நினைவைச் சுற்றும் அத்தனை ரத்தம்.
என்
நினைவின் இடைவாரில் அத்தனை பிணமும்!
பீப்பாய் ரம்மின் எந்திரத் தோட்டா
பீறிடும் ஒளியில் தெளிவாய்த் தூண்டும்
அவச்சொல் பெற்ற கலகம் பலதின்
கொடிய விடுதலை அதீதம் பருகும்
மோகம் கொண்ட பார்வை தன்னில்
என்
நினைவாய்ச் சுற்றும் அத்தனை ரத்தம்!

ஃப்ரெஞ்சுக் காலனியாதிக்கத்தை எதிர்த்துக் கவிதையும் அரசியலும் படைத்த மர்த்தினிக் என்ற பசிஃபிக் தீவின் முன்னாள் மேயர் எமே செஸேர். எமே செஸேர், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மறைந்தார். இவருடைய பெயர்பெற்ற் புத்தகம், தாயகம் திரும்புவதற்கான கையேடு (Le Cahier d'un Retour du pays natal, 1939). இதிலிருந்து நான் தமிழாக்கம் செய்த வரிகள் இவை - நாகார்ஜுனன்.

றஞ்சினி --- ஓர் கடிதம்

றஞ்சினி --- ஓர் கடிதம்....ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் போர் உக்கிரமடைந்துகொண்டிருக்கிறது ,போர் நிற்பதற்க்கான எந்த அழுத்தங்களும் நிகழ்வுகளும் அங்கு காணப்படவில்லை போர் உச்சமடைந்துகொண்டிருப்பதைத்தவிர.. .. இறந்துகொண்டிருக்கும் மக்கள், அனாதரவாக விடப்பட்டமக்கள் .இந்தக்கொடுமைகளுக்குள் இயற்க்கையிடமும் சிக்கித்தவிக்கும் மக்களின் நிலை ..இழப்புக்கழும் ,அழிவுகள் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழகத்தில் மக்கள் , கலைஞ்ஞர்கள் , எழுத்தாளர்கள் , தமது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது நாம் அங்கு இல்லாவிட்டாலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு சந்தோசத்தை நம்பிக்கையைக்கொடுக்கிறது. உங்களுடன் சேர்ந்து எம் உணர்வுகளையும் தோழமையும் இத்துடன் தெரிவிக்கிறேன்... மெரினா கடற்க்கரையில் நடக்கும் இந்த ஒப்பாரி கவிதை நிகழ்வு ஈழத்தமிழர்களுடன் இலங்கை அரசால் நீண்ட வருடங்களாக தொடர்ந்து கொல்லப்படும், துன்புறுத்தப்படும் மீனவ தோழர்களுக்கான ஒப்பாரியாகவும் இருக்கிறது இதில்பங்குபெறும் அனைத்து எழுதாள கவிதாயினிகள் ,கவிஞ்ஞர்கள், நண்பர்களுக்கும் மற்றும் அனைத்துமக்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்கழும்
தோழமையும்..

றஞ்சினி.

December 5, 2008

ஜீவன் ஜெகன்

எறிகணை (செல்) வீச்சைக் கண்டித்து சொல் வீச முன்வந்த கவிஞர்களுக்கு நன்றிகள்.


-ஜீவன் ஜெகன் -

Shan Nalliah/ Norway....

Dear Poets!

I greet you all to do your best on Poem Stage on 07-12-08 and publish this as a historical collection...

-Shan Nalliah/ Norway-

அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு ஆதரவு மடல்

அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு ஆதரவு மடல்
ஒரு காலத்தில் 'மாமொத்' என்ற பாரிய உடல் கொண்ட பனியானை இந்தப் பூமியில்
வாழ்ந்தது. 4500 வருடங்களுக்கு முன்னர் அந்த யானை இனம் அழிந்துபோனது.
நான் வாழும் கனடா நாட்டில் ஒரு காலத்தில் Dawson Caribou என்ற மான் இனம்
பல்கிப் பெருகி வாழ்ந்தது. ஆனால் 1984ம் ஆண்டுக்கு பிறகு அந்த மான்
இனத்தை ஒருவரும் காணவில்லை. முற்றிலுமாக அழிந்துவிட்டது.
2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் நியூயோர்க்கில் இருக்கும் The
American Museum of Natural Hiostory அருங்காட்சியகத்துக்கு
போயிருந்தேன். அங்கே பாடம் செய்யப்பட்ட புறாவகை ஒன்றை விஞ்ஞானி
காட்டினார். அதன் பெயர் passenger pigeon. கொலம்பஸ் அமெரிக்காவை
கண்டுபிடித்த சமயத்தில் அங்கே 300 கோடி புறாக்கள் ( passenger pigeons)
இருந்தனவாம். இப்பொழுது ஒன்றுகூட இல்லை. கடைசிப் பறவை 1914ல்
இறந்துவிட்டது. அதைத்தான் பாடம் செய்து வைத்திருந்தார்கள்.
இந்தப் பூமியில் ஆதியிலிருந்து உயிர்கள் தோன்றுவதும், பரிணாமத்தில்
வளர்ச்சியடைவதும் பின்னர் அழிவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
இப்பொழுது அதே மாதிரி இலங்கையில் ஓர் அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்து நடக்கும் தமிழ் இன அழிப்பு இப்பொழுது
உச்சக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. உலகத்திலே எங்கேயாவது ஓர் அரசு தன்
மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி அழித்திருக்கிறதா? அது இலங்கையில்
தினம் நடந்துகொண்டிருக்கிறது. எம் கண்முன்னே தமிழ் இனம் மெல்ல மெல்லச்
சாகிறது.
இந்தச் சமயத்தில் போரில் சிக்கி அழிவை நோக்கி செல்லும் ஈழத் தமிழினத்தின்
விடிவை வேண்டி தமிழகத்தின் அன்பு உள்ளங்கள், கவிஞர்கள் டிசம்பர் ஏழாம்
தேதி மெரினாவில் கண்டனக் கவியரங்கம் நடத்துவதாக அறிகிறேன். இது என்னுடைய
நெஞ்சை மாத்திரமல்ல உலகெங்கும் பரந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சங்களின்
மனதையும் நெகிழ்வடைய வைத்திருக்கிறது.
கவிஞர்களின் கண்டனக் கூட்டம் சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காகவும்,
ஈழத் தமிழர்களின் விடிவு நிசமாகவேண்டும் என்பதற்காகவும் என்
பிரார்த்தனையை செலுத்துகிறேன்.

அன்புடன்
அ.முத்துலிங்கம்

இலங்கை இன படுகொலைக்கு எதிரான கண்டன கவிதை பேரணி - பங்கேற்கும் கவிஞர்கள்

1. விக்ரமாதித்தியன்

2. ஞானக்கூத்தன்

3. கலாப்ரியா

4. கோணங்கி

5. கல்யாண்ஜி

6. சுகுமாரன்

7. பிரபஞ்சன்

8. இந்திரன்

9. இன்குலாப்

10. சா. தமிழ்ச் செல்வன்

11. ரசூல்

12. காமராசு

13. யவனிகா ஸ்ரீராம்

14. மனுஷ்ய புத்திரன்

15. ரமேஷ் பிரேம்

16. திலகவதி

17. வெளி ரங்கராஜன்

18. லஷ்மி மணிவண்ணன்

19. பாலை நிலவன்

20. பெருமாள் முருகன்

21. பாமா

22. மாலதி மைத்ரி

23. அ.மங்கை

24. வா. கீதா

25. பூமா ஈஸ்வர முர்த்தி

26. குட்டி ரேவதி

27. க்ருஷாங்கினி

28. லதா ராமகிருஷ்ணன்

29. வெண்ணிலா

30. இளம்பிறை

31. யாழன் ஆதி

32. லீனா மணிமேகலை

33. சுகிர்தராணி

34. உமா மகேஸ்வரி

35. தமிழச்சி தங்கபாண்டியன்

36. இன்பா சுப்பிரமணியன்

37. வியாகுலன்

38. நட சிவக்குமார்

39. ரவீந்திர பாரதி

40. ஐய்யப்ப மாதவன்

41. அஜயன் பாலா

42. என். டி. ராஜகுமார்

43. சமயவேள்

44. பவா செல்லதுரை

45. குமார் அம்பாயிரம்

46. கண்ட ராதித்தன்

47. ஸ்ரீநேசன்

48. ரவி சுப்பிரமணியன்

49. நா. முத்துக்குமார்

50. யுகபாரதி

51. தாமரை

52. ஆ. வேங்கடாசலபதி

53. அழகிய சிங்கர்

54. யூமா வாசுகி

55. ராஜ மார்த்தாண்டன்

56. நஞ்சுண்டன்

57. நெய்தல் கிருஷ்ணன்

58. ஸ்ரீகுமார்

59. குவளை கண்ணன்

60. சூரிய நிலா

61. அனுசியா

62. நந்தமிழ் நங்கை

63. கவிப்பித்தன்

64. சுந்தரபுத்தன்

65. அருள் எழிலன்

66. ஸ்டாலின் ராஜாங்கம்

67. கீதாஞ்சலி பிரியதர்சன்

68. முத்துக் கிருஷ்ணன்

69. சூரியச் சந்திரன்

70. பாரி கபிலன்

71. அரச முருகுபாண்டியன்

72. அழகுநிலா

73. தென்றல்

74. நீலகண்டன்

75. இந்திரா

76. பெரியசாமி ராஜா

77. தமிழ் நதி

78. ராஜா சந்திர சேகர்

79. தேவி பாரதி

80. வெளி ரங்கராஜன்

81. பால் நிலவன்

82. அமிர்தம் சூர்யா

83. முனியப்ப ராஜ

84. செல்வா புவியரசன்

85. தக்கை சாகிப் கிரன்

86. இசை

87. இளங்கோ கிருஷ்ணன்

88. விருத்தாசலம் ஹரி

89. ஆண்டாள் பிரியதர்சினி

90. அரங்க மல்லிகா

91. சந்திரா

92. கவிதா

93. பிரேமா ரேவதி

94. ஜெயராணி

95. அனிச்சம்

96. பழனிவேள்

97. பிரான்சிஸ் கிருபா

98. திலகபாமா

99. அழகிய பெரியவன்

100. பாக்கியம் சங்கர்

101. ஹரன் பிரசன்னா

102. விஸ்வா மித்திரன்

103. பா. முருகன்

104. தேவேந்திர பூபதி

105. சல்மா

106. வளர்மதி

107. ராணி திலக்

108. செல்மா பிரியதர்சன்

109. எஸ். தேன்மொழி

110. இளவேனில்

111. இராஜேந்திரன்

112. கூத்த லிங்கம்

113. மனோன்மணி

114. அபிலாஷ்

115. குலசேகரன்

116. பிரியம்வதா

117. பெனித்தா

118. செந்தமிழ் மாரி

119. உமா சக்தி

120. விஜய லெட்சுமி

121. பிராபாகரன்

122. விவேகானந்தர்

123. மெய்யருள்

124. தாரா கணேசன்

125. உமா தேவி

126. சி. ராஜதுரை

127. தபசி

128. செல்வகுமார்

129. கவிமனோ

130. யூசுப்

131. ஜ.எஸ். தயாளன்

132. கமலம் அசோக்

133. கிருஷ்ண கோபால்

134. ராஜ நாச்சியப்பன்

135. பாலு

136. சங்கர்

137. சிவ பாஸ்கரன்

138. கம்பீரன்

139. நரன்

140. கென்

141. மரகதமணி

142. ஐய்யனார்

143. நிஷாந்தினி

144. ரா. சின்னசாமி

145. லெட்சுமி சரவணகுமார்

146. மருதா பாண்டியன்

147. சிவ குருநாதன்

148. உமா பார்வதி

149. பரமேஸ்வரி

150. கறிச்சோறு முத்து

151. கா. வை. பழனிச்சாமி

152. கு. சின்னசாமி

153. கி. சரவணகுமார்

154. பழ. புகழேந்தி

155. செந்தூரம் ஜெகதீசன்

156. வைகை செல்வி

157. நிலாப்பிரியன்

158. சக்தி அருளாநந்தம்

159. முருகேஷ்

160. கி. சரவணக்குமார்

161. பா. தமிழ்ச் செல்வன்

162. ராஜேஸ்வரி

163. சங்கவை

164. ஸ்ரீபதி பத்பநாபா

165. எழிலரசி

166. சு.மு. அகமது

167. தென்பத்தி நாதன்

168. ரங்கசாமி

169. டாக்டர். சோம சேகர்

170. டாக்டர். சி. லெட்சுமணன்

171. மணி

172. கவின் மலர்

173. ஆரிசன்

174. ஜஷா

175. முஜபுர் ரகுமான்

176. சிவா

177. ஆனந்த்

178. அ. ரோஸ்லின்

179. அம்சப்பிரியா

180. இளங்கவி அருள்

இலங்கை இன படுகொலைக்கு எதிராய் சில சொற்கள் - லக்ஷ்மி மணிவண்ணன்

ஈழ தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரி தமிழ் கவிஞர்களின் கண்டனம் - சில சொற்களோடு

ஒவ்வொரு இனத்திற்கும், அதன் உள்புறத்தில் இயங்கும் இனக்குழுக்களுக்கும், நீண்ட மரபுடனும் சடங்குகளுடனும் வழிபாடுகளுடனும் கூடிய அகவுடல் ரசசியங்களால் அமைந்திருப்பது. உரிமைகளை, எதிப்பை, பாதுகாப்பை, உறவை அவை உரிய வழிகளில் ரகசியங்களை பேணிய வண்ணம் எதிர்கொள்ள இயலாமல் போகும் போது வெடிப்புறத் தொடங்குகிறது.

மானுடவியல், இனவரையியல் போன்ற அறிவுக் கருவிகள், ஊடகத் தகவல்கள் ஆகியவை இனங்களை, சமூகங்களை, குழுக்களை அறிய உதவுவது போன்ற பாவனைகள் மட்டுமே, அறிவுக் கருவிகள் மூலம் சமூகத்தின் ஒரு பண்பை அறிய முயலும்போது அறிய இயலாத பகுதிகளை, ஊடக வழிகள் கொண்டும் பொதுப் புத்தி சார்ந்தும் இட்டு நிரப்பும் முயற்சி முடிவில் அடிப்படை உள்ளுணர்வின் எதிர்ப்புணச்சிக்கு இலக்காவது தவிர்க்க இயலாதது.

பொதுப் புத்தி என்பது மக்களின் பார்வை என்பதல்ல. மாறாக அது முன்னேற்றம், வளர்ச்சி, வெற்றி, பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பதங்களின் ஊடாக வறண்ட கற்பனையை களியூட்டுகிற அரசின் செயல் ஆகும், மனித உயர் உணர்வின் உயர்ந்த பட்ச சாத்தியங்களை, தன்னிச்சையான கற்பனையின் விகாரத்தை இது தடை செய்யும் செயலும் ஆகும். இச் செயல்பாட்டின் ஒரு பகுதியான பொதுப்புத்தி என்பது படைப்புச் செயல்பாட்டுக்கு நேர் எதிர் திசையில் கதி நிலை பெற்றிருந்தலின் அபாயத்தை பல திசைகளில் எதிர் கொள்ளும் திசையில் இன்றைய மனித இருப்பின் ஆதாரம் குழப்பமடைந்திருக்கிறது. உயர் மனசாட்சியின் எதிர்ப்பாக ரகசியங்களின் அறச்செயல்பாடாக துப்பாக்கிச் சத்தத்தை பெருகச் செய்தது. எதிர்ப்பிற்கு மௌனத்தையும் அலட்சியத்தையும் முகம் காட்டும், தனிமனித பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாகக் கூறும் உலக முழுதும் விரிந்துள்ள ஒற்றைபடை நாகரீக ஜனநாயக அரசு ஆகும்.

தனி மனிதப் பாதுகாப்பை முன்னிறுத்தி, சமூகங்களை அலட்சியம் செய்யும் இவ்வரசு எதையும் பாதுகாக்க இயலாத நிலைக்கு பின் தள்ளப்பட்டு விட்டது.

இந்நிலையில் இவ்வரசுக்கு அப்பாற்பட்டு, பொதுப்புத்தி, அரசியல், ஊடகம், ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டு கவிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோர்களின் தற்கால சமூகப் பொறுப்புகள் என்னென்னவாக அமைய வேண்டும். இவை நமது பொது சுயத்தின் விசாரனைக்கு உட்பட்டவை, இவ்விசாரணையே வருங்காலங்களில் ஜனநாயக அரசுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே நிகழவிருக்கும், மோதல்களின் போது சகல விதமான வாழ்தலின் சுதந்திரத்தை மீட்கவும் வலியுறுத்தவும் நமக்கு உதவும்.

இந்த அடிப்படையிலேயே ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் போருக்குத் தமிழ் கவிஞர்கள் தங்கள் உணர்வின் பொது வெளிப்பாடாக கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

மாறுபட்ட வாழ்க்கைப் பின்புலனும் வரலாறும் கொண்ட ஈழத் தமிழர்களின் படைப்புகள் சுயதன்மையும் சுய வரலாறும் கொண்டவை. தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் ஈழத் தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் தனித்து அறியப் படவேண்டியவை. தமிழினம் என்று ஒற்றை இனப் பார்வையை முன்னிறுத்தும் ஊடகமறதி அரசியல் குரல்களிலிருந்து படைப்புக் குரல்கள் மாறுபட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகில் எந்தவொரு இனமும் எந்தவொரு காரணத்தின் பெயராலும் ராணுவத்தின் தலைமையோடு ஒழிக்கப்படுவதை தமிழ் கவிஞர்கள் எதிர்க்கிறோம். அவ்வகையில் ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவப் போரை தமிழ் கவிஞர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்க் கவிஞர்கள் இக்கண்டனத்தைத் தெரிவிக்கும் இச் சந்தர்ப்பத்தில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவிக்கும் கோரிக்கைகள் இவை.

1. உலக அளவில் ஈழத் தமிழ் அகதிகள் – தமிழகத்தில்தான் வேறெங்கு நடப்பதைக் காட்டிலும் மலிவான முறையில் நடத்தப்படுகிறார்கள். அவமானத்திற்குள்ளாகிறார்கள் மனிதவுரிமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் கண்காணிப்பிற்கிலக்காகிறார்கள். அகதிகள் முகாம்கள் சிறைக் கூடங்களுக்கு ஒப்ப அமைந்துள்ளன. சமூக அவமானங்களும் சமூக அநீதிகளுக்கும் ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் இலக்காகிறார்கள். மனிதவுரிமைகளின் அடிப்படையில் இவற்றை களைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2. ஈழத் தமிழ் படைப்பாளிகளின் நூற் பதிப்புகளுக்கு தமிழகம் முக்கியத்துவமளிக்க வேண்டும். ஈழத் தமிழ் படைப்புகளும், வரலாறும் மாணவர்களின் பாடத் திட்டங்களில் இடம் பெறவேண்டும். செம்மொழி திட்டங்களில் ஆய்வுகளில் ஈழத் தமிழுக்கு உரிய இடம் தரப்பட வேண்டும்.

3. ஈழத்தில் வட இந்திய பன்னாட்டுமுதலாளிகள், முதலாளிகள் நில ஆக்ரமிப்பு செய்வதையும், இந்திய அரசு அதற்கு ஊக்கமாகத் திகழ்வதையும் தமிழக அரசு கண்டித்து ஈழ தமிழ் நில ஆக்ரமிப்புகளை தடுக்க வகை செய்ய வேண்டும். அம்மக்களுடனான நேர்மையான உறவு வலுப்பட இது உதவும்.

4. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர் தாக்குதலுக்கு இலக்காவது இந்திய அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான செயலின்மையை காட்டுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.

5. இலங்கை ராணுவத்திற்கான ராணுவ ஒத்துழைப்பை இந்திய அரசு கைவிடுவதோடு ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் போரை நிபந்தனைகளற்று உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து பின்னர் பேச்சுவார்த்தையைத் துவங்கவேண்டும்.